புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி ஜப்பான் முன்னாள் பிரதமர் கொலை குறித்து தனது இரங்கலையும் கேள்வியையும் எழுப்பியுள்ளார் அது பின்வருமாறு : ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமரும், அந்நாட்டில் அதிக காலம் பிரதமராக பதவி வகித்த பெருமைக்குரியவருமான ஷின்சோ அபே அவர்கள் முன்னாள் கடற்படை வீரர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. பல நாடுகளின் தலைவர்கள் தங்களுடைய இரங்கலையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார்கள்.
தனது உடல்நிலை தொய்வின் காரணமாக இரண்டு வருடங்களுக்கு முன்பு தானாகவே பதவியிலிருந்து விலகினார். தான் பதவி விலகினாலும் விரைவில் நடைபெற உள்ள பிரதமர் பதவிக்கான தேர்தலில் தனது கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவாக அவர் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போதுதான் இந்த வருத்தத்திற்குரிய சம்பவம் நடந்தேறி உள்ளது. ஷின்சோ அபே அவர்களின் வெளிநாட்டு கொள்கை மற்றும் உள்நாட்டுத் திட்டங்களால் பாதிக்கப்பட்ட / வெறுப்புக்கு ஆளாகிய ஒருவரால் வீட்டில் தயாரித்த துப்பாக்கியைப் பயன்படுத்தி அவர் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
ஒரு நாட்டின் தலைவருடைய கொள்கையின் மீது மாற்றுக் கருத்துக் கொண்ட எவரும் ஜனநாயக ரீதியாக தீர்வு காண்பதற்கு பதிலாக மூர்க்கத்தனமான முடிவை எடுத்ததை எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். உலகில் மிகப்பெரிய அளவிற்கு தொழில், கல்வி ஆகியவற்றில் வளர்ச்சி கண்ட தேசத்திலும் இதுபோன்ற வன்முறைகளுக்கும் வாய்ப்பு இருந்திருப்பது அதிர்ச்சி இருக்கிறது.
அபே தனது ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவுடன் மிகவும் நெருக்கமாகவும், அண்டை நாடான சீனாவிற்கு எதிரான நிலைப்பாட்டையும் கொண்டிருந்தார். கார்ப்பரேட் வரிகளை 30 சதவீதத்திலிருந்து 20-25 சதவீதமாகக் குறைத்து கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருந்துள்ளார். இது போன்ற பல காரணங்களால் அவர் பழமைவாதியாக கருதப்பட்டு இருக்கிறார்.
மேடையிலேயே கொலையாளியை காவல்துறை கைது செய்து இருக்கிறது. முழுமையான விசாரணைக்குப் பின்பே அபே சுடப்பட்டதற்கான உண்மையான காரணங்கள் வெளிவரும்.
அண்மைக் காலத்தில் இந்தியாவுடன் அதிகம் நட்பு பாராட்டிய அபே அவர்களின் இழப்பு இந்தியாவிற்கு மிகப்பெரிய பின்னடைவு தான். அவருடைய மறைவிற்கு புதிய தமிழகம் கட்சி ஆழ்ந்த இரங்கலையும், அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கிறது என குறிப்பிட்டுள்ளார்.