
பிரதமர் மோடி ஆட்சியில் பாதுகாப்பு துறை வேகமாக முன்னேறி வரும் நிலையில், இந்தியாவின் எல்லைப் பாதுகாப்பில் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற புதிய கண்டுபிடிப்பு ஒன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன் எதிர்ப்பு ரோந்து வாகனம் இந்தியாவின் பாதுகாப்பு வசதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது. ‘இந்திரஜால் ரேஞ்சர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வாகனம், பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அதிகரித்து வரும் ட்ரோன் நுழைவுகளை துல்லியமாக கண்டறிந்து, ஓடிக்கொண்டிருக்கும்போதே அழிக்கும் திறனை கொண்டுள்ளது. இது இந்தியாவின் பாதுகாப்பு துறையில் மிகப் பெரிய மாற்றத்தையும், எதிர்கால போர்த் தளவாடங்களில் புதிய யுகத்தையும் உருவாக்கும் கண்டுபிடிப்பாக கருதப்படுகிறது.
இந்திய எல்லைகளில் ட்ரோன்களை அதிக அளவில் பயன்படுத்தி ஆயுதங்கள், வெடிகுண்டுகள், போதைப் பொருட்களை பாகிஸ்தான் கடத்தி வந்தது. குறிப்பாக பஞ்சாப் எல்லை பகுதிகளில் அதிகமான ட்ரோன் இயக்கம் பதிவாகியதால், BSF வீரர்கள் தினமும் சவால்களை எதிர்கொண்டனர். இந்த ஆண்டு மட்டும் நூற்றுக்கணக்கான பாகிஸ்தான் ட்ரோன்கள் இந்திய எல்லை பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டு சுட்டு வீழ்த்தப்பட்டன. ட்ரோன்களின் பாதை, உயரம், வேகம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பதால், ஒரு இடத்தில் மட்டும் அமைந்த ட்ரோன்-ஜாமர்கள் முழுமையான தீர்வாக செயல்பட முடியாத நிலை உருவானது. அதற்கான நிரந்தரத் தீர்வை கண்டறிய தொழில்நுட்ப ரீதியாக இந்தியா மிக முன்னேறிய முடிவை எடுத்துள்ளது.
இந்த சூழ்நிலையில், ‘இந்திரஜால்’ நிறுவனம் முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்ட, ஏ.ஐ சக்தியுடன் இணைக்கப்பட்ட ட்ரோன் எதிர்ப்பு ரோந்து வாகனத்தை உருவாக்கியுள்ளது. கவச வாகன வடிவத்தில் உருவாக்கப்பட்ட இந்த ரேஞ்சரில், வலுவான சென்சார்கள், செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு கருவிகள், மற்றும் வானில் உள்ள குறிக்கோளை துல்லியமாகப் பிடிக்கும் முன்னேற்றமான படத் தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது. இது எதிரி நாட்டின் ட்ரோன்களை கண்டறிந்து, அந்த தகவலை உடனடியாக செயலாக்கி, ஏவுகணை மூலம் வானிலேயே சுட்டு வீழ்த்தும் திறனை கொண்டுள்ளது. வாகனம் ஓடிக்கொண்டிருக்கும் போதே இந்த அனைத்து செயல்களும் நடைபெறுவது தான் இதன் மிகப் பெரிய சிறப்பாகும். இதன்மூலம் எல்லை பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மிக வேகமாகவும் துல்லியமாகவும் அமையும்.
எல்லைப் பகுதியின் இயற்கை சூழல் மிக மாறுபட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. பாலைவன மணல், களிமண், விவசாய நிலங்கள், கால்வாய்கள், கற்கள் நிரம்பிய இடங்கள், நகரப் பகுதிகள் என பலத்த மாறுபாடு உள்ள சூழலில் கூட இந்த ரேஞ்சர் வாகனம் தடையின்றி இயங்குகிறது. இதனால் எல்லைப் பகுதிகளில் ரோந்து பணியை மேற்கொள்வது அதிக எளிதாகிறது. நாட்டின் முக்கிய பாதுகாப்பு மையங்கள், விமான நிலையங்கள், முக்கிய நகரங்கள் போன்ற இடங்களிலும் இந்த வாகனத்தை பயன்படுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
இந்த கண்டுபிடிப்பு இந்தியாவின் பாதுகாப்பு துறையில் மிகப்பெரிய முன்னேற்றமாகக் பார்க்கப்படுகிறது . மோடி தலைமையில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் மூலம் உள்நாட்டு பாதுகாப்பு தொழில்நுட்ப வளர்ச்சி மிக வேகமாக உயர்ந்து வருகிறது. ரேஞ்சர் அறிமுகத்துடன், இந்தியா இன்று ட்ரோன்களை தேடி கண்டுபிடிக்கும் நாடாக அல்ல, அவற்றை ஓடிக்கொண்டிருக்கும் வாகனத்திலிருந்து கூட சுட்டு வீழ்த்தும் ஆற்றல் கொண்ட சக்திவாய்ந்த நாடாக மாறியுள்ளது. இந்தியா தனது எல்லைகளை பாதுகாக்கும் வலிமையை புதிய தொழில்நுட்பத்தால் மேலும் உறுதிப்படுத்திக் கொண்டுள்ள இந்த தருணம், உலக நாடுகளுக்கு இந்தியாவின் பாதுகாப்புத் திறனையும், தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் வெளிப்படுத்தும் முக்கியமான அடையாளமாக அமைந்துள்ளது.
