
உலகம் முழுவதும் பேசப்பட்டுவருவது அமெரிக்காவின் வர்த்தக வரி விதிப்பு தான் இது தொடர்பாக 12 நாடுகளுக்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டால் பதில் வரி விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை டிரம்ப்
அமெரிக்க அதிபராக, 2-வது முறையாக கடந்த ஜனவரி 20-ம் தேதி டொனால்டு ட்ரம்ப் பொறுப்பேற்றார். அமெரிக்காவுக்கு இந்தியா உட்பட உலக நாடுகள் தங்கள் நாட்டு பொருட்களுக்கு அதிக வர்த்தக வரி விதிப்பதாக தெரிவித்தார்.இதற்கு பதிலடியாக பரஸ்பர வரி விதிக்கப்படும் என அறிவித்த அவர், கடந்த ஏப்ரல் 2-ம் தேதி அதற்கான பட்டியலையும் வெளியிட்டார். இதில் இந்திய பொருட்களுக்கு 26% வரி விதிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.எனினும், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா தயாராக இருந்தது. இதையடுத்து, இடைக்கால ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள ஏதுவாக பரஸ்பர வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார் ட்ரம்ப். இதையடுத்து, அமெரிக்காவுடன் பல நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.பிரிட்டன், வியட்நாம் ஆகிய 2 நாடுகளுடன் மட்டுமே அமெரிக்கா வரி விதிப்பு தொடர்பாக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
அதேநேரம், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுடன் ஒப்பந்தம் ஏற்படாத நிலையில் 12 நாடுகள் உடனான வரி விதிப்பு வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என கூறியுள்ளார். இந்தியா - அமெரிக்கா இடையே வர்த்தக வரி விதிப்பு தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் சிறப்பு செயலர் மற்றும் வர்த்தக துறை செயலர் ராஜேஷ் அகர்வால் பேச்சுவார்த்தையின் தலைவராக செயல்பட்டு வருகிறார். அகர்வால் தலைமையிலான இந்திய குழு கடந்த ஜூன் 26 முதல் ஜூலை 2 வரை அமெரிக்காவில் முகாமிட்டு இருந்தது. பேச்சுவார்த்தையில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை என கூறப்படுகிறது. இதற்காக அமெரிக்கா சென்றிருந்த இந்திய அதிகாரிகள் குழு கடந்த 4-ம் தேதி நாடு திரும்பியது.
ஜவுளி, தோல் மற்றும் காலணிகள் சந்தையை அணுக வாய்ப்பு அளிக்க வேண்டும் என இந்தியா கேட்கிறது. அதேநேரம், அமெரிக்காவோ, வேளாண்மை மற்றும் பால்பொருள் சந்தையில் தாராளம் காட்டுமாறு கோருவதாக கூறப்படுகிறது. வேளாண் விளைபொருட்கள் விவகாரத்தில், குறிப்பாக மரபணு மாற்றப்பட்ட பயிர்களை அனுமதிப்பதில் உடன்பாடு எட்டப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. இந்த துறை தொடர்பானவிவகாரத்தில் இந்தியா எப்போதும் உறுதியான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.இதற்கிடையே இரும்பு, அலுமினியம் மீதான கூடுதல் வரி விதிப்புக்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்க இந்தியா முடிவு செய்துள்ளது.இது அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் இதுபற்றி கூறியதாவது: அமெரிக்கா உடனான வர்த்தக வரி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா அவசரப்படவில்லை. குறிப்பாக இந்தியாவின் பொருளாதார நலன்களை பணயம் வைக்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாது. இந்த விவகாரத்தில் காலக்கெடுவை காரணம் காட்டி இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும் சில விஷயங்களில் இந்தியா சர்வதேச மன்றங்களை நாட தயங்கவில்லை. வாகன உதிரிபாகங்கள் மற்றும் அலுமினியம் மீதான அமெரிக்காவின் வரிகளுக்கு எதிராக உலக வர்த்தக அமைப்பில் இந்தியா முறையிட்டது. எனவே, இந்தியா மீது அமெரிக்கா தன்னிச்சையாக வரி விதித்தால், அந்த நாடு விதிக்கும் அதே அளவுக்கு பரஸ்பர வரி விதிக்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அமெரிக்க பொருட்களை இந்தியாவில் வாங்குவது குறையும் இதனால் அமெரிக்காவுக்கு 65 ஆயிரம் கோடி முதல் 1 லட்சம் கோடி வரை இழப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.