24 special

போராட்டங்கள் வன்முறையாக மாறினால்..? உள்துறை அமைச்சர் கடும் எச்சரிக்கை..!

Bjp
Bjp

கர்நாடகா : மாநிலத்தில் உள்ள மக்கள் அமைதி காக்கவேண்டும். சமூக நல்லிணக்கத்தை நிலைநாட்டவேண்டும். போராட்டங்கள் தேவையற்ற ஒன்று என கர்நாடக உள்துறை அமைச்சர் ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.


சிறுபான்மையின மக்களால் இறைத்தூதர் என நம்பப்படும் நபிகள் நாயகம் குறித்து முன்னாள் பிஜேபி தலைவரான நுபுர் ஷர்மா சர்ச்சைக்குரிய வகையில் சில கருத்துக்களை கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து உத்திரபிரதேசத்தில் முதல் வன்முறை தொடங்கியது. அதைத்தொடர்ந்து பல இடங்களில் போராட்டக்காரர்கள் கலவரங்களில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் கர்நாடக உள்துறை அமைச்சர் ஞானேந்திரா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் " மாநில அமைதிக்காக அனைத்து முன்னேற்பாடுகளையும் அதற்கான நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். இஸ்லாமியர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினால் எந்தவொரு பிரச்சினையும் இல்லை.

ஆனால் கூறப்பட்ட கருத்து ஒரு முடிந்துபோன அத்தியாயம். அந்த சர்ச்சைக்குரிய கருத்தை கூறியவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது. அவரும் மன்னிப்பு கோரிவிட்டார். மக்கள் அனைவரும் அமைதியை நிலைநாட்ட முன்வரவேண்டும். மாநில உளவுத்துறை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. தொடர் போராட்டங்களை கருத்தில் கொண்டு மத்திய உள்துறை அமைச்சகமும் மாநிலத்தை உஷாராக இருக்க அறிவுறுத்தியுள்ளது.

அனைத்து காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட மதத்தலைவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட மாநில அரசு முடிவெடுத்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான உயர்மட்ட காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. போராட்டங்கள் வன்முறையாக மாறினால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்" என உள்துறையமைச்சர் ஞானேந்திரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் கடந்த வெள்ளிக்கிழமையன்று கர்நாடகாவில் நடந்த போராட்டத்தை தொடர்ந்து மாநிலத்தில் பதட்டம் மிகுந்த பகுதிகளுக்கு மாநில அரசு KSRP பட்டாலியனை பாதுகாப்பு பணிகளுக்காக அனுப்பிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.