புதுதில்லி : தற்போது வெளிவந்துள்ள ராஜ்யசபா தேர்தல் முடிவுகள் பிஜேபிக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் வந்த இந்த முடிவுகள் பிஜேபியை மேலும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அடுத்து வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் போட்டியில் இருப்பதால் ஜூலை 18 தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நேற்றோடு 15 மாநிலங்களில் உள்ள 57 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தல் முடிவடைந்துள்ளது. இதில் 11 மாநிலங்களில் 41 உறுப்பினர்கள் போட்டியின்றி தேந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
நான்கு மாநிலங்களில் காலியாக உள்ள 16 ராஜ்யசபா சீட்டுக்களுக்கு காலியிடங்களை விட மிக அதிகமான போட்டியாளர்கள் இருந்ததால் தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பிஜேபி கைவசம் இருந்த 24 ராஜ்யசபா இடங்களில் 22 ஐ மட்டும் இந்த தேர்தலில் தக்கவைத்துக்கொண்டது. மேலும் ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவளித்து அந்த இடத்தையும் உறுதிசெய்து கொண்டது.
இந்த தேர்தலில் 10.86 லட்சம் வாக்குகள் இருந்த நிலையில் பிஜேபி மற்றும் அதன் தலைமையிலான கூட்டணி 48 சதவிகிதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த தேர்தலில் மஹாராஷ்டிரா கர்நாடகா மற்றும் ஹரியானாவில் எதிர்கட்சிகளுக்குள் ஏற்பட்ட கருது வேறுபாடு மற்றும் ஒற்றுமையின்மை அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் பிரதிபலிக்கும் என பிஜேபி எதிர்ப்பார்க்கிறது.
குறிப்பாக மஹாராஷ்டிராவில் மஹாவிகாஸ் அங்காடி சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்றபோதும் ஆறு இடங்களில் மூன்றை பிஜேபி கைப்பற்றியுள்ளதால் பிஜேபி மேலும் குஷியாகியுள்ளது. இதனால் அடுத்து வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தல் பிஜேபிக்கு மிகப்பெரிய சாதகமாக இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.