லடாக் : கடந்த சிலநாட்களுக்கு முன்னர் அமெரிக்க தளபதி பிளைன் சீன தனது உட்கட்டமைப்பை இந்திய சீன எல்லையில் பலப்படுத்தி வருகிறது என்றும் பாலங்களை அமைத்துவருகிறது என்றும் இந்தியாவிற்கு எச்சரிக்கை செய்திருந்தார். மேலும் அதுதொடர்பான புகைப்பட ஆதாரங்களையும் வெளியிட்டிருந்தார். இதை முற்றிலும் மறுத்த சீனா எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றவேண்டாம் உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள் என கண்டிப்புடன் கூறியிருந்தது.
ஆனால் எல்லையில் 25 போர்விமானங்களை சீனா நிறுத்தியிருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மத்திய அரசின் தகவலின்படி ஹோட்டன் விமான தளத்தில் 25 முன்னணி போர்விமானங்களை நிறுத்திவைத்துள்ளது. இந்த 25 விமானங்களில் ஜே 11 மற்றும் ஜே-20 ரக நவீன போர்விமானங்களும் அடக்கம். இந்த ஹோட்டன் விமான தளத்தில் முன்பு மிக் 21 ரக விமானங்களையே நிறுத்தியிருந்தது.
ஆனால் தற்போது நவீன ரக விமானங்களை நிறுத்தியுள்ளது. மேலும் ஹோட்டன் தளத்தில் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ள போர்விமானங்களின் எண்ணிக்கையும் சீனா அதிகரித்துள்ளது. மேலும் இந்திய சீன எல்லைக்குஅருகில் சீன விமானப்படை விமானநிலையங்களை கட்டமைத்து வருகிறது. இதனால் குறைந்த உயரங்களில் இருந்தே விமானங்களை பறக்கவைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஜெனரலான சார்லஸ் பிளைன் " மேற்கு எல்லைப்பகுதியில் சீன ராணுவத்தால் உருவாக்கப்படும் சில உட்கட்டமைப்புகள் மிக ஆபத்தானவை" என இந்தியாவை எச்சரித்திருந்தார். இதைத்தொடர்ந்து இந்திய புலனாய்வுத்துறை அமைப்புகள் எல்லையப்பகுதியை தீவிரமாக கண்காணித்து வருகின்றன. குறிப்பாக சீன விமானப்படையின் ஒவ்வொரு அசைவுகளையும் நமது புலனாய்வு அமைப்புகள் உன்னிப்பாக நோட்டம் விட்டு வருகின்றன.
வடக்கே லடாக் தொடங்கி அருணாச்சலப்பிரதேசம் வரையிலான இந்திய சீன எல்லைப்பகுதியில் சீன ராணுவம் மற்றும் விமானப்படையின் நடவடிக்கைகள் இந்தியாவால் உற்றுக்கவனிக்கப்பட்டு வருகிறது. ஹோட்டன் விமானப்படை தளம் மட்டுமல்லாமல் ஜின்ஜியாங் மற்றும் திபெத் பகுதிகளில் உள்ள கார்குன்சா, காஷ்கார், ஹாப்பிங், டோங்கோ டிஸோங் மற்றும் லின்சி உள்ளிட்ட சீன நடமாட்டம் உள்ள விமானப்படை தலங்களையும் புலனாய்வு அமைப்புகள் உற்றுநோக்கி வருகின்றன.
அதேபோல இந்தியாவும் தனது பங்கிற்கு சுகோய் 30 எம்.கே.ஐ, மிக் 29 மற்றும் மிராஜ் 2000 போர்விமானங்களை விமானப்படை தளங்களில் தயாராக நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.