கேரளா : கடவுளின் நகரம் என அழைக்கப்பட்ட கேரளா தற்போது வெடுகுண்டுகளின் நகரம் எனவும் கொலைகளின் நகரம் எனவும் அழைக்கப்படுவதாக விமர்சனம் எழுந்துள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் சிபிஐஎம் தலைமை அலுவலகத்தில் நேற்று முந்தினம் நள்ளிரவு வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
கடந்த சிலநாட்களுக்கு முன்னர் ராகுல்காந்தியின் வயநாடு எம்பி அலுவலகம் சிபிஐஎம் மாணவரணி அமைப்பினரால் சூறையாடப்பட்டது. அதைத்தொடர்ந்து சிபிஐஎம் மாணவரணி அமைப்பினர் சிலர் கைதுசெய்யப்பட்டனர். இந்த சூழ்நிலையில் காங்கிரஸ் தலைவர் காங்கிரசார் நடத்தும் பொதுக்கூட்டத்தில் பேச ராகுல் கண்ணூர் வந்திருந்தார்.
இந்த சமயத்தில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் இருசக்கரவாகனத்தில் வேகமாக வந்த ஒருவர் சிபிஐஎம் திருவனந்தபுரம் தலைமையகம் வாசலில் வெடிகுண்டை வீசிவிட்டு சென்றதாக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் உயிர்சேதமோ அல்லது கட்டிடத்திற்கு பெரும் சேதமோ ஏற்படவில்லை என போலீஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.
ஆனாலும் அந்த வெடிகுண்டு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பயங்கர சக்திவாய்ந்த வெடிகுண்டு என கூறப்படுகிறது. தாக்குதல் நடத்தப்பட்ட சிறிது நேரத்திலேயே தடயவியல் நிபுணர்கள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் தடயங்களை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டது காங்கிரஸ்காரர்கள் என சிபிஐஎம் குற்றசாட்டை முன்வைத்துள்ளது.
ஆனால் காங்கிரஸ் தரப்பு இதை திட்டவட்டமாக மறுத்துள்ளது. சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறப்படும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பி.கே.ஸ்ரீமதி கூறுகையில் " நான் ஏகேஜி சென்டரின் மூன்றாவது தளத்தில் தங்கியிருந்தேன். அப்போது இரவு 11.30 மணியளவில் பெருத்த சத்தம் கேட்டது. மேலும் வாசலில் இருந்து புகை வெளியேறுவதையும் கண்டேன்.
நான் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன். இந்த கொடூர தாக்குதலை அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து கண்டிக்கவேண்டும்" என தெரிவித்தார். கொடியேறி பாலகிருஷ்ணன் கூறுகையில் " இந்த தாக்குதலின் சதித்திட்டத்திற்கு பின்னால் காங்கிரஸ் இருக்கிறது. இது நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்ட தாக்குதல்" என தெரிவித்தார்.
திருவனந்தபுரம் போலீஸ் கமிஷனர் சபர்ஜன் குமார் கூறுகையில் "நாங்கள் சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்துள்ளோம். விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சிபிஐஎம் மட்டுமல்லாமல் அனைத்து கட்சிகளின் அலுவலகங்களிலும் பாதுகாப்பை அதிகப்படுத்தியுள்ளோம். அனைத்து மாவட்ட எஸ்பிக்களுக்கும் தீவிர கண்காணிப்பை பலப்படுத்துமாறு மாநில காவல்துறை தலைவர் அனில்கந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்" என கமிஷனர் தெரிவித்துள்ளார்.
சிபிஐஎம் தொண்டர்கள் கோட்டயம் கோழிக்கோடு பகுதியில் பேரணிகள் நடத்திவருவதோடு கோட்டயம் டிசிசி அலுவலகம் மீது நேற்று கல்வீச்சு நடத்தியுள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் திருவாஞ்சூர் ராதா கிருஷ்ணன் " காவல்துறையின் கண்முன்னே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தங்கக்கடத்தல் வழக்கு மற்றும் ராகுல்காந்தியின் வருகையை திசைதிருப்ப சிபிஐஎம் அலுவலகம் மீதான தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டள்ளது" என கூறியுள்ளார்.
இந்நிலையில் மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதுடன் அனைத்து வாகனங்களும் கடுமையான சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. பதட்டம் உருவாகும் என கருதப்படுகின்ற இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.