சென்னை : தமிழகத்தில் உள்ள கிறித்தவ பள்ளிகளில் கட்டாய மதமாற்றம் செய்யப்படுவதாக பல வருடங்களாக புகார் எழுந்துவந்தது. சமீபத்தில் அரியலூரில் கட்டாய மதமாற்றத்தால் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டதாக தமிழகம் முழுவதும் பலத்த கண்டன்குரல் எழுந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் திருப்பூரிலும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காஞ்சிபுரத்திலும் கட்டாய மதமாற்றம் குறித்து மாணவிகள் புகாரளித்திருந்தனர்.இந்நிலையில் பள்ளிகளில் கட்டாயமாதமாற்றம் நடப்பதை தடுக்க பல பொதுநல மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பி,ஜெகன்நாத் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தொடுத்த மனுவின் மீதான விசாரணை நேற்று உயர்நீதிமன்றத்தில் வந்தது, வழக்கறிஞர் கொடுத்த மனுவில் " தஞ்சாவூரில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவி தனது விடுதியில் உள்ள அறைகளை சுத்தம்செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டதாகவும்,
கிறித்தவமதத்தில் சேரும்படி வற்புறுத்தப்பட்டதாகவும் இதனால் மனமுடைந்த மாணவி தற்கொலைக்கு முயன்று ஜனவரி 19 புதன்கிழமையன்று சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்" என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.ஆனந்தி மற்றும் ஆர்.மஹாதேவன் ஆகியோர் கொண்ட அமர்வு நேற்று தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிபதிகள் உத்தரவில் "பள்ளிகளில் மதமாற்றத்தை தடுக்க வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வகுக்க வேண்டும். நான்கு வாரங்களுக்குள் பதில் பிரமான பத்திரத்தை தாக்கல் செய்யவேண்டும்" என நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.