
தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது. உதயநிதியை முதல்வர் ஆக்கும் திட்டத்தில்திமுக படு ஜோராக வேலை செய்துவருகிறது.
இதற்கிடையில் போடியில் தி.மு.க நிர்வாகியின் ஏலக்காய் நிறுவனம், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகளின் பின்னணித் தகவல்கள், பெரும் அதிர்வை ஏற்படுத்தியிருக்கின்றன!தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் நகராட்சித் தலைவராக இருப்பவர் தி.மு.க-வைச் சேர்ந்த ராஜராஜேஸ்வரி. இவரின் கணவர் சங்கர், தி.மு.க மாநிலச் செயற்குழு உறுப்பினராகவும், போடிநாயக்கனூர் நகராட்சி 29-வது வார்டு கவுன்சிலராகவும் இருக்கிறார். இவர்களுடைய மகன் லோகேஷ் தமிழக, கேரளப் பகுதிகளில் ஏலக்காய் கொள்முதல் செய்து, வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வியாபாரம் செய்துவருகிறார். இந்த நிலையில், இவர்களது நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, ஜி.எஸ்.டி நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள், வணிக வரித்துறையினர், மற்றும் அமலாக்கத்துறையினர் 5 நாள்கள் சங்கரின் வீடு, ஏலக்காய் குடோன், கேரளாவிலுள்ள ஏலக்காய் குடோன், அலுவலகங்களில் சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட நிறுவனம் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வரி முறைகேடு செய்திருப்பதாக, அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகின.
இந்த முறைகேட்டின் பின்னணி என்ன என்று விசாரித்தால் , “சங்கரின் குடும்பம் ஏலக்காய்களை வாங்கி விற்பதோடு, சொந்தமாக கேரளாவிலும் தமிழகத்திலும் ஏலக்காய் ஏல விற்பனை நிலையத்தையும் நடத்திவருகிறது போடிநாயக்கனூரிலுள்ள 70 சதவிகித ஏலக்காய் மார்க்கெட்டைக் கைப்பற்றி தனி ராஜ்யமே நடத்தி வந்துள்ளார்கள்.பல ஆண்டுகளாக இவர்கள் இந்தத் துறையில் இருப்பதால், இதில் இருக்கும் சட்டவிரோதச் செயல்கள் இவர்களுக்கு அத்துப்படி. இதைப் பயன்படுத்தித்தான் பெரிய அளவில் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருக்கின்றனர்.
அதாவது, தன்னுடைய பினாமிகளின் பெயர்களில் போலியாக நூற்றுக்கணக்கான நிறுவனங்களைப் பதிவுசெய்து, ஜி.எஸ்.டி எண், ஏலக்காய் வாங்கும் லைசென்ஸ் ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார் சங்கர். பின்னர் இந்த பினாமிகளின் பெயர்களில் கேரளாவிலிருந்து ஏலக்காய்களை ஏலத்தில் எடுத்து, தமிழகத்துக்குள் இருக்கும் தன்னுடைய குடோனுக்குக் கொண்டு வந்துவிடுகிறார். அங்கிருந்து தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களிலுள்ள தன் டீலர்களுக்கு முறைகேடான வழிகளில் ஏலக்காய் விற்பனை செய்துவந்திருக்கிறார். இப்படி பினாமிகளின் பெயர்களில் ஏலக்காய் விற்பனை செய்யும்போது, பெரிய அளவில் வருமான வரியோ அல்லது ஜி.எஸ்.டி-யோ கட்டவேண்டிய தேவை எழாது.
உதாரணத்துக்கு, ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்துக்கு மொத்தமாக ஏலக்காயை வாங்கிச் செல்லும்போது, IGST எனும் 5 சதவிகித வரி செலுத்தவேண்டியிருக்கும். அதுவே, சிறு வணிகர்கள் என்றால், வெறுமனே 1 சதவிகித வரி மட்டும் செலுத்தினால் போதும். அடுத்ததாக, வருமானமும் பல்வேறு பினாமிகளின் பெயர்களில் சிறிய தொகைகளாகப் பிரிக்கப்பட்டுவிடுவதால், வருமான வரி செலுத்துவதிலுமிருந்தும் விலக்கு கிடைத்துவிடும். அதேசமயம், இந்தச் சட்டவிரோத வியாபாரத்தின் பின்னணியில் கிடைக்கும் ஒட்டுமொத்த வருமானமும் சங்கர் குடும்பத்தினருக்கே வந்து சேர்ந்துவிடும்.
இந்த நிலையில், இந்த முறைகேட்டின் பின்னணியில் பெரிய அளவில் பணம் புரளும் இந்த வியாபாரத்தின் பின்னணியில், அரசியல் புள்ளிகளின் சப்போர்ட்டும் இருக்கிறது. முக்கியமாக, தமிழக ஆளுங்கட்சியின் குடும்பப் புள்ளி ஒருவரும், மதுரை மாண்புமிகு ஒருவரும் இந்த விவகாரத்தின் பின்னணியில் இருக்கின்றனர். அதே போல் 2026 தேர்தலுக்கான `பசை’ வரும் வழிகளை அடைத்து, ஆளுங்கட்சிக்கு ‘செக்’ வைக்க மத்திய தரப்பு தீவிரம் காட்ட ஆரம்பித்து விட்டது . எனவே, இப்படியான பசைப்புள்ளிகள் லிஸ்ட்டில், ஆளுங்கட்சிப் புள்ளிகள் பலர் விரைவில் சிக்குவார்கள்” என்கின்றனர்.
