
தென்காசி மாவட்டம் கரியநல் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பால்வண்ணநாதர் கோவில், பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான தெய்வ ஸ்தலம். இக்கோவிலின் சுற்றுச்சுவரைச் சுற்றி வணிக வளாகம் கட்டுவதற்கான அனுமதி இந்து சமய அறநிலைத்துறை வழங்கியதை எதிர்த்து, தென்காசி புளியங்குடியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜஸ்டிஸ் ஆர். எம். அம்மு மற்றும் ஜஸ்டிஸ் கிருஷ்ணன் ராமமூர்த்தி ஆகியோர், கோவிலின் புனிதத்தையும் பாரம்பரியத்தையும் காக்கும் நோக்கில் முக்கியமான உத்தரவை பிறப்பித்தனர்.“கோவில் சுற்று பகுதியில் வெற்றிடம் இருக்கிறது என்பதற்காக அங்கு வணிக வளாகம் போன்ற கட்டுமானங்களை மேற்கொள்வது ஏற்றதல்ல. குறிப்பாக, கோவிலின் பிரதான நுழைவாயிலுக்கு அருகில், கோவிலை விட உயரமான, பெரிய அளவில் வணிக வளாகம் கட்டப்படுவது ஆன்மீக மரியாதைக்கே அவமரியாதையாகும்.”
“இந்திய இந்து சமய அறநிலைத்துறை ஒரு ‘ப்ராபர்ட்டி டெவலப்பர்’ போல நடந்து கொள்ளக்கூடாது. கோவில் நிலங்கள் வணிக நோக்கத்திற்காக அல்ல, ஆன்மீக, கலாசார, சமூக பணிக்காகவே பயன்படுத்தப்பட வேண்டும்.”இதன் அடிப்படையில், மதுரை உயர்நீதிமன்றம் தென்காசி பால்வண்ணநாதர் கோவில் அருகே நடைபெறும் வணிக வளாக கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தி, வழக்கை தொடர்ந்து விசாரிக்க உத்தரவிட்டது.
இதேபோன்று, கடந்த சில ஆண்டுகளில் கோவில் நிலங்களில் வணிக வளாகம் அமைப்பது தொடர்பாக உயர்நீதிமன்றம் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளது.2018ஆம் ஆண்டு, திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் கோவில் சுற்றுப்பகுதியில் வணிக வளாகம் கட்டுவதற்காக தொடங்கப்பட்ட திட்டத்தையும் நீதிமன்றம் தடை செய்தது. அப்போது, நீதிபதிகள் தெளிவாகக் கூறினர்:
“கோவில் என்பது ஆன்மீக மையம், அது வணிக மையமாக மாறக்கூடாது. கோவில் நிலம், கோவிலின் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.”அதேபோல, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் அருகே கடைத்தொகுதிகள் அமைக்க முயன்ற வழக்கிலும் நீதிமன்றம் தடை உத்தரவிட்டது. அந்த தீர்ப்பில் “கோவில் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக வணிக வளாகம் கட்டுவது தவறு. பக்தர்கள் வரும் இடங்கள் அமைதியான சூழலில் இருக்க வேண்டும்.”மேலும், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சுற்றுவட்டாரத்தில் நடந்த சில வர்த்தக விரிவாக்கங்கள் குறித்த வழக்கிலும், மதுரை உயர்நீதிமன்றம் அதே நிலைப்பாட்டைத் தெரிவித்தது
“கோவில் ஒரு கலாசார அடையாளம். அதைச் சுற்றியுள்ள நிலங்கள் வர்த்தக மையங்களாக மாறும் போக்கை உடனே நிறுத்த வேண்டும்.”
“கோவில் நிலம் என்பது வணிக நோக்கத்திற்காக அல்ல, பக்தி மற்றும் பாரம்பரிய நோக்கத்திற்காக!”தென்காசி பால்வண்ணநாதர் கோவில் வழக்கில் வழங்கப்பட்ட இந்த சமீபத்திய தீர்ப்பு, முன்பு வழங்கப்பட்ட திருவண்ணாமலை மற்றும் திருச்செந்தூர் வழக்குகளின் தீர்ப்புகளை மீண்டும் நினைவூட்டுகிறது.
“இந்திய பாரம்பரியம், கோவில்கள் மற்றும் அதன் நிலங்கள் மக்கள் நம்பிக்கையின் அடையாளம். அதில் வணிக சுவர்கள் எழுப்பப்படும் நிலை ஏற்பட்டால், அது நம் மத அடையாளத்தையே பாதிக்கும்.”இந்த தீர்ப்பு, தமிழகத்தில் உள்ள பல பழமையான கோவில்களின் நிலங்களை பாதுகாப்பதற்கான புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. மதுரை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு, இனி வரும் நாட்களில் “கோவில் நிலம் வணிக வளாகம்” என்ற தவறான நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தீர்ப்பாகப் பார்க்கப்படுகிறது
