
மேகதாதுதாதுவில் அணைகள் கட்டுவதற்கான அடிப்படை பணிகளை தொடங்கிவிட்டோம் என்று கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறியுள்ளார். கர்நாடகாவில் விவசாய நிலம் 6% அதிகரித்துள்ளது என்றும், கபினி அணையில் இருந்து பெறப்படும் உபரி நீரால் பாசன பகுதியில் விவசாயம் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.காவிரி நதியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடகா அரசு தீவிரம் காட்டிக் கொண்டே வருகிறது. இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தமிழ்நாட்டின் எதிர்ப்பை மீறி கர்நாடகா அரசு மேகதாது அணை கட்டுமான முயற்சிகளை செய்து வருகிறது.
காவிரியில் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை பெறுவதற்கு பெரும் போராட்டமே நடத்த வேண்டியுள்ள நிலையில், மேகதாதுவில் அணை கட்டினால் அது பெரும் பாதகமாக வாய்ப்பு உள்ளது என்பதால் தமிழகம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடகா அடம் பிடித்து வருகிறது.இந்த திட்டத்திற்காக ஏற்கனவே ரூ.1,000 கோடி நிதியையும் கர்நாடகா ஒதுக்கி உள்ளது. மேலும் அணை கட்ட மத்திய அரசிடம் ஒப்புதலும் கோரியுள்ளது. ஆனால் மத்திய அரசு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை.
இந்த நிலையில் தான், மேகதாதுவில் அணை கட்டுவதற்கான அடிப்படை பணிகளை தொடங்கி விட்டோம் என்று கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறியுள்ளார். இது தொடர்பாக டிகே சிவக்குமார் கூறியதாவது:-கர்நாடகாவில் விவசாய நிலம் 6% அதிகரித்துள்ளது. கபினி அணையில் இருந்து பெறப்படும் உபரி நீரால் பாசன பகுதியில் விவசாயம் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேகதாதுவில் அணைகள் கட்டுவதற்கான அடிப்படை பணிகளை தொடங்கிவிட்டோம்" என்றார்.
விளம்பர மாடல் ஆட்சி 'எங்களின் அனுமதியின்றி, எந்த கொம்பனாலும், காவிரியின் குறுக்கே, அணை கட்ட முடியாது' என, தி.மு.க., அரசு வீர வசனம் பேசிக் கொண்டிருக்கிறது. அதேநேரத்தில், மறுபுறம் மேகதாது அணை கட்டுமானப் பணிகளுக்கான, நிலம் கணக்கீட்டுப் பணிகளை நிறைவு செய்து, அவற்றை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை, கர்நாடக அரசு துவங்கி இருக்கிறது. கடைமடை பாசன மாநிலங்களின் அனுமதியின்றி, எந்த ஒரு இடத்திலும், புதிய அணையை கட்ட முடியாது என உச்ச நீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் தெளிவாக அறிவுறுத்தியது. அதன்பிறகும் சட்ட விரோதமாக, மேகதாது அணையை கட்டியே தீருவோம் என, கர்நாடக அரசு பிடிவாதம் பிடிப்பது,குறித்து திமுக அரசு வாய் திறக்காமல் இருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்திற்கு சட்டப்படி வழங்க வேண்டிய நீரை, கர்நாடகத்திடம் இருந்து கேட்டுப் பெற முடியாத தி.மு.க., அரசு, இதற்கு மேலும் கூட்டணி தர்மத்திற்காக மவுனம் காத்தால், அது காவிரி டெல்டா விவசாயிகளுக்கு இழைக்கும், மாபெரும் அநீதி ஆகும்.கர்நாடகா முதல்வரின் பதவியேற்பு விழாவுக்கும், கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கும், பெங்களூருவுக்கு ஓடோடி செல்லும் முதல்வர், தமிழகத்திற்கு வரும் கர்நாடகா துணை முதல்வரை, சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் முதல்வர், காவிரி விவகாரத்திற்காக எத்தனை முறை சந்தித்திருக்கிறார். இக்கேள்வி விவசாயிகள் ஒவ்வொருவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
மேகதாது அணையை பொறுத்தவரை 'இது கர்நாடக அரசின் அரசியல் நாடகம்' என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லியிருக்க வேண்டும், எப்போதுமே பதில் சொல்வதில்லை. அ.திமு.க., ஆட்சிக் காலத்தில் முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கிய பின்பே, அணையிலிருந்து பாதுகாப்பிற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.ஸ்டாலின் ஆட்சியில் தற்போது அணையில் 136 அடி தண்ணீர் வந்தவுடனேயே பாதுகாப்பு கருதி அணை தண்ணீரை வெளியேற்றுகிறது கேரள அரசு. தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது. அதுகுறித்த தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு தமிழகத்தில் மதிப்பில்லை.எதிர்க்கட்சியாக இருக்கும் போது விவசாயிகள் நினைப்பதற்கு முன்பாகவே தி.மு.க., போராட்டங்களை கையில் எடுத்தது. தமிழகத்தில் விவசாயிகளுக்கான உரிமைகளை பாதுகாக்க வேண்டுமெனில் தி.மு.க., எப்போதும் எதிர்கட்சியாக இருப்பதே நல்லது. என விவசாய சங்கங்கள் முடிவெடுத்துள்ளது.