உத்திரபிரதேசம் : மற்ற மாநிலங்களில் ராம நவமியின்போதும் ஹனுமான் ஜெயந்தியின் போதும் வன்முறைகள் வெடித்தன. ஆனால் உத்திரபிரதேசத்தில் எந்த ஒரு வன்முறையும் நடக்கவில்லை என மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறிய அடுத்த சிலநாட்களிலேயே வன்முறை வெடித்திருப்பது தற்செயலாக நடந்ததாக தெரியவில்லை. சிலரின் தூண்டுதலின்பேரிலேயே நடந்தேறியுள்ளது என பிஜேபியினர் கூறிவருகின்றனர்.
உத்திரபிரதேச மாநில பிஜேபி செய்திதொடர்பாளரான நுபுர் ஷர்மா இஸ்லாமிய இறைதூதரான முகம்மது நபிகளை பற்றி சர்ச்சையான கருத்துக்களை கூறியதாக கருதப்படுகிறது. அதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை உத்திரபிரதேசம் கான்பூரில் தொழுகையை முடித்துவிட்டு நுபுர் ஷர்மா பேசியதற்கு கண்டனம் தெரிவித்து சந்தைப்பகுதியில் இருக்கும் கடைகளை மூடச்சொல்லி வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து இருபிரிவினருக்கிடையே பலத்த மோதல் ஏற்ப்பட்டது. இருதரப்பினரும் கற்களை வீசி தாக்கிக்கொண்டதாக போலீஸ் தரப்பு தெரிவிக்கிறது. இந்த வன்முறையில் முப்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். போலீஸ் தரப்பில் 13 பேருக்குகாயம் ஏற்பட்டுள்ளது. வன்முறையை தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் கமிஷனர் விஜய் மீனா சிங் செய்தியாளர்களிடம் " சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து வருகிறோம். இதன்மூலம் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். சதிச்செயல் செய்தவர்கள் மீது குண்டர்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.
இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 36 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் அடையாளம் தெரியாதவர்கள் மீதும் மூன்று பிரிவுகளின் கீழ் எப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ளது" என போலீஸ் கமிஷனர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் மாயாவதி ஆகியோர் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். மேலும் மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.