பஞ்சாபில் சங்ரூர் லோக்சபா தொகுதியில் ஆம் ஆத்மியின் எம்.பி.,யாக இருந்தவர் பகவந்த் மான். இங்கு, பிப்ரவரியில் நடந்த சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மாநில முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றதையடுத்து, சங்ரூர் எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார்.
உத்தர பிரதேசத்தில் ஆஜம்கர் லோக்சபா தொகுதி எம்.பி.,யாக இருந்த சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ராம்பூர் தொகுதியின் எம்.பி.,யாக இருந்த சமாஜ்வாதியின் ஆஜம்கான் ஆகியோர், பிப்ரவரியில் நடந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
இதையடுத்து இருவரும் எம்.பி., பதவியை ராஜினாமா செய்தனர். வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் போர்டோவாலி நகர், அகர்தலா, ஜுப்ராஜ் நகர், சுர்மா ஆகிய தொகுதிகள் காலியாக இருந்தன. டில்லியில் ரஜிந்தர் நகர், ஆந்திராவில் அத்மகூர், ஜார்க்கண்டில் மந்தார் ஆகிய சட்டசபை தொகுதிகள் காலியாக இருந்தன.இந்த மூன்று லோக்சபா மற்றும் ஏழு சட்டசபை தொகுதிகளுக்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன.பஞ்சாபின் சங்ரூர் தொகுதியில் அகாலி தளம் அமிர்தரசின் பிரிவின் தலைவர் சிம்ரன்ஜித் சிங் மான் வெற்றி பெற்றார். இவர் ஆளும் கட்சியான ஆம் ஆத்மீ வேட்பாளரை வீழ்த்தினார்.
உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் இரண்டு லோக்சபா தொகுதிகளையும் ஆளுங்கட்சியான பா.ஜ. க கைப்பற்றியது. ராம்பூர் தொகுதியில் பா.ஜ. க வின் ஞான்ஷியாம் லோதி, சமாஜ்வாதியின் முகமது ஆசிம் ராஜாவை, அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.ஆஜம்கர் தொகுதியில் பா.ஜ.க வின் தினேஷ் லால் யாதவ் நிராஹுவா, சமாஜ்வாதியின் தர்மேந்திர யாதவை தோற்கடித்தார்.
ஆந்திராவின் அத்மகூர் தொகுதியில், ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியின் மேக்பதி விக்ரம் ரெட்டி வெற்றி பெற்றார். ஜார்க்கண்டின் மந்தார் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஷில்பி நேஹா டிர்க்கி வெற்றி பெற்றார்.
வட கிழக்கு மாநிலமான திரிபுராவில் போர்டோவாலி நகர் தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்ட முதல்வர் மாணிக் சஹா, காங்கிரசின் ஆசிஷ் குமார் சஹாவை அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.அகர்தலா தொகுதியில் காங்கிரசின் சுதீப் சாய் பர்மன் வெற்றி பெற்றதையடுத்து, திரிபுரா சட்டசபையில் காங்கிரஸ் மீண்டும் காலடி எடுத்து வைத்துள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. சுர்மா தொகுதியில் பா.ஜ.க வின் ஸ்வ்பனா தாஸ், ஜுப்ராஜ்நகர் தொகுதியில் பா.ஜ.க வின் மலினா தேப்நாத் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதில் பெரும்பாலான இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது, பஞ்சாப்பில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மீ முதல் இடைத்தேர்தலில் தோல்வியை தழுவி இருக்கிறது.
அதே நேரத்தில் பாஜக தனது இடங்களை வலுவாக மாற்றி இடை தேர்தலிலும் வெற்றி பெற்று ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளுக்கும் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது.