அமலாக்கத்துறை மற்றும் வருமானவரித்துறை சோதனைகளில் திமுகவின் முக்கிய அமைச்சர்கள் எம்பிகள் தொடர்ந்து சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமானவரி துறை அதிகாரிகள் கடந்த ஐந்து நாட்களாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர் தமிழகத்தில் பல முக்கிய தொழில்களை தன்வசம் வைத்திருக்கிறார், முன்னதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுகவின் சொத்து பட்டியல்கள் வெளியிட்ட பொழுது அதன் முதல் பாகத்தில் இவரது பெயரும் இடம் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜெகத்ரட்சகன் தொடர்புடைய 70 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் முழு ஆய்வில் ஈடுபட்டது திமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமின்றி அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சோதனையில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் நோட்டுகள் சிக்கி உள்ளதாகவும் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாகவும் அது குறித்த ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது. மேலும் அதிகாரிகள் சோதனையிடும் கோணத்தை வேறு விதமாக மாற்றி உள்ளார்கள் என்றும் அதாவது ஏதேனும் ரகசிய அறைகள் சோதனை மேற்கொள்ளப்படும் இடத்தில் இருக்கிறதா என்ற வகையிலும் சோதனை நடைபெற்றுள்ளதாக செய்திகள் வெளியானது. அதனை அடுத்து அதிகாரிகள் சோதனை மேற்கொள்ளும் இடத்திற்கு எல்லாம் பலத்த பாதுகாப்புடன் சோதனை மேற்கொண்டதும் திமுகவின் பிற முக்கிய அமைச்சர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளதாம்..
ஏனென்றால் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி இவர்களது வரிசையில் தற்பொழுது ஜெகத்ரட்சகன் சிக்கி உள்ளார் தொடர்ந்து அடுத்து யார் மீது சோதனை பாயும் என்ற பதட்டத்தில் இருப்பதாக அறிவாலய வட்டாரங்கள் கிசுகிசுகிறது. அதோடு தற்போது நேற்று சென்னை அடையாறில் உள்ள ஜெகத்ரட்சகன் வீடு மற்றும் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள பாரத் பல்கலைக்கழக அலுவலகத்திலும் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர் அந்த சோதனையின் முடிவில் வருமானவரித் துறையின் புலனாய்வு ஆணையர் சுனில் மாத்தூர், ஜெகத்ரட்சகன், அவரது மகள் ஸ்ரீநிஷா மற்றும் மருமகன் நாராயணசாமி இளமாறன் ஆகிய மூவரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டு உள்ளார். அதற்குப் பிறகு ஜெகத்ரட்சகன் வீட்டிலிருந்து வருமானவரித்துறை அதிகாரிகள் நான்கு பெட்டிகள் நிறைய பணம் மற்றும் ஆவணங்களை எடுத்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கிலோ கணக்கில் தங்கம், கோடிக்கணக்கில் பணம், மாற்றவேண்டிய செல்லாத 2000 ரூபாய் நோட்டு, வெளிநாடுகளில் குவித்துவைத்த மில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துக்கள் என ஜெகத்ரட்சகன் தென்னிந்திய முக்கிய தொழிலதிபராக இருந்த விவகாரம் தெரியவந்துள்ளது. இவர் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்தை வைத்து பார்த்தால் கிட்டத்தட்ட அஜித் படமான மங்காத்தாவில் வருவதுபோல் ஒரு ஆள் பாதி உயரத்தில் பணக்கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என சில அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இவர் இடத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இன்னும் பல முக்கிய விவகாரங்கள் சிக்கும் எனவும் தெரிகிறது..
இப்படி அதிகாரிகளால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் விசாரணை மேற்கொள்ளப்பட்டதில் ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது மகன் மற்றும் மகள் ஆகிய மூவரும் தெரிவித்த பதில்களை வைத்து ஜெகத்ரட்சகனின் சொத்துக்கள் வருமான வரி துறையால் முடக்கம் செய்யப்படும் அல்லது கைப்பற்றப்படும் என்றும் வங்கி கையிருப்புகள் முடக்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலின் படி ஜெகத்ரட்சகனின் சொத்து மற்றும் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டால் திமுகவிற்கு அது பேரிடியாக அமையும் என தெரிகிறது.