தமிழக அரசிற்கும் தமிழக ஆளுநருக்கும் இடையே நிலவிவந்த பணிப்போர் நேற்று உச்சம் பெற்றுள்ளது என்பதை தமிழக சட்ட சபை நிகழ்வுகளை பார்த்த அனைவருக்கும் தெரிந்து இருக்கும் இந்த சூழலில் ஆளுநருக்கு. எதிராக தொடர்ச்சியாக திமுகவினர் பல்வேறு கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.
அமைச்சர் பொன்முடி ஆளுநரின் முதுகிற்கு பின்னால் போயா என கையசைத்தது ஆளுநர் மீதான திமுகவின் உள் மனதின் வெளிப்பாட்டை வெளிப்படுத்துவது போன்று இருந்தது, ஒரு படி மேலே சென்று ஆர்.எஸ். பாரதி முதல்வர் மட்டும் கண்ணை காட்டி இருந்தால் ஆளுநர் நிலை என்ன ஆகும் என்று சர்ச்சையை மேலும் தூண்டினார்.
இந்த நிலையில் இன்று காலை திமுக கட்சி அலுவலகத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது அதில் முதல்வர் ஸ்டாலின் திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொடுத்த அறிவுரை தற்போது பேசு பொருளளாக மாறி இருக்கிறது.
ஆளுநருக்கு எதிராக சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் யாரும் எந்தவிதமான கருத்துக்களும் தெரிவிக்கக்கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் துவங்கியது. ஆளுநர் ரவி சபையில் இருக்கும் போதே அவருக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் நடந்துகொண்டது சர்ச்சையை உண்டாக்கியது.
இந்தநிலையில், சட்டப்பேரவையின் இரண்டாவது நாளான இன்று மறைந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மறைந்த உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
சட்டமன்றத்திலிருந்து திமுக உறுப்பினர்கள் அண்ணா அறிவாலயம் வருகை தந்தனர். அங்குள்ள கலைஞர் அரங்கில் காலை 11.15 மணிக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் துவங்கியது. கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினர்களிடம், “சட்டமன்றத்தில் தொகுதி பிரச்சனைகளைப் பேச வேண்டும்.
எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டாலும் தாங்கள் எந்தவிதமான எதிர்வினையும் ஆற்றக்கூடாது. ஆளுநருக்கு எதிராக சட்டமன்றத்தில் யாரும் எந்தவிதமான கருத்துக்களும் தெரிவிக்கக்கூடாது.” என அறிவுறுத்தியுள்ளார். 20 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 11.38-க்கு நிறைவடைந்தது.
தொடர்ச்சியாக ஆளுநருக்கு எதிரான மோதல் போக்கு ஆளும் அரசிற்கு நல்லது இல்லை என்றும், மத்திய அரசு முழு அதிகார பலத்துடன் இனி வரும் நாட்களில் களம் இறங்கலாம் அதோடு ஆளுநரை ஆளும் அரசின் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் விமர்சனம் செய்வது நீதிமன்றங்கள் வரை விவகாரம் சென்றுள்ளது இனியும் இதே நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் ஆளுநறுக்கு எதிரான போராட்டம் மூலம் சில அமைப்புகள் ஊடுருவலாம் என மாநில உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்து இருக்கிறதாக கூறப்படுகிறது.இதையடுத்தே ஆளுநருக்க எதிராக யாரும் பேசவேண்டாம் என சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி இருப்பது வெளிப்படையாக தெரியவந்துள்ளது.