
அதானி நிறுவனத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் எல்.ஐ.சி. மூலம் அதிகளவு நிதியை மத்திய அரசு முதலீடு செய்ய வைத்தது என்ற குற்றச்சாட்டை நியூயார்க் போஸ்ட் நாளேடு வெளியிட்ட நிலையில், அது அடிப்படை ஆதாரமற்ற தகவல் என எல்.ஐ.சி. நிறுவனம் மறுத்துள்ளது. அதானி குழுமம் பற்றிப் பல்வேறு பொய்களை கூறி வந்த ஹிண்டேன்பெர்க் முழுமையாக மூடப்பட்ட நிலையில், பிகார் சட்டமன்ற தேர்தல் நேரத்தில் வாஷிங்டன் போஸ்ட் நாளேடு எல்.ஐ.சி மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அரசு பொதுத்துறை நிறுவமனமான எல்.ஐ.சி மூலம் கடந்த மே மாதம், அதானி குழுமத்தின் பல நிறுவனங்களில், 507 மில்லியன் டாலர்களை அதாவது சுமார் 32,000 கோடியை முதலீடு செய்ததாகவும் மத்திய அரசு தந்த அழுத்தத்தின் கீழ், நிதி ஆயோக் மற்றும் எல்.ஐ.சி உடன் இணைந்து நிதித்துறை அதிகாரிகளால் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது என்று வெளிநாட்டு பத்திரிக்கையான வாஷிங்டன் போஸ்ட் கட்டுரை கூறுகிறது. இதனை வைத்து கொண்டு காங்கிரஸ், கூட்டு நாடாளுமன்றக்குழு மற்றும் பொதுக் கணக்குக் குழுமூலம் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
மறுபுறம், வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட கட்டுரை தொடர்பாக விளக்கமளித்துள்ள எல்.ஐ.சி நிறுவனம், தங்களின் முதலீட்டு முடிவுகளில் எந்த ஒரு வெளிநபர் அல்லது அரசின் தலையீடும் கிடையாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதானி குழுமத்தில் தொடர்புடைய நிறுவனங்களில் முதலீடு செய்ய எந்த ஒரு ஆவணத்தையோ அல்லது திட்டத்தையோ எல்.ஐ.சி தயாரிக்கவில்லை என்றும், விரிவான ஆய்வு மற்றும் கணக்கெடுப்புக்குப் பிறகு, எல்.ஐ.சி கொள்கை அடிப்படையில் சுயாதீனமாகவாக முதலீட்டு முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
எல்.ஐ.சி-யின் முதலீட்டு முடிவுகளில் நிதித்துறை அல்லது வேறு எந்தக் குழுவிற்கும் பங்கு இல்லை என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், எல்.ஐ.சி-யின் முதலீட்டு முறைகளை பாதிக்கவும், நாட்டு மக்கள் LIC மீது வைத்திருக்கும் நம்பிக்கையைக் கெடுக்கும் நோக்கில் நியூயார்க் போஸ்ட் வெளியிடப்பட்ட கட்டுரை வெளியிட்டிருப்பது போல் தோன்றுகிறது என்றும் LIC அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது கடந்த காலங்களில் அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் என்ற நிறுவனம் பல்வேறு நிதி முறைகேடு புகார்களை முன்வைத்தது.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எல்ஐசி மூலம் அதானியை மத்திய அரசு பாதுகாப்பதாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் மல்லிகார்ஜுனேவுக்கு பதிலளித்து பதிவிட்டுள்ள அண்ணாமலை, முதலீட்டு முடிவுகளில் நிதிச்சேவைகள் துறை ஈடுபடவில்லை என்பதை எல்ஐசி ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளது எனக் கூறியுள்ளார்.
2013-14 ஆம் ஆண்டில் எல்ஐசியின் மொத்த பங்கு மூலதனம் 2 லட்சத்து 55 ஆயிரம் கோடியாக இருந்தது எனவும், இது 2024-25 ஆம் ஆண்டில் 13 லட்சத்து ஆயிரத்து 656 கோடியாக வளர்ந்தது எனத் தெரிவித்துள்ள அண்ணாமலை, அதானி நிறுவனத்தில் எல்ஐசி மேற்கொண்டுள்ள முதலீடுகள் அதன் மொத்த பங்குகளில் 4.5% மட்டுமே எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.மேலும், காங்கிரஸ் கட்சி நிதி நேர்மை குறித்து பேசுவது பிக்பாக்கெட் திருடன் பணப்பையை பாதுகாப்பதை குறித்து கற்பிப்பதை போன்றது எனவும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
ஏற்கனவே அதானி குழுமத்தை குறிவைத்து ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட நிதி முறைகேடு புகார்கள் மூலம் பங்குச்சந்தையில் அதன் விலை குறைந்த போது, அதிகளவில் அதன் பங்குகளை வாங்கி சிலர் கொள்ளை லாபம் சம்பாதித்தனர்.
அதன் பின்னர் SEBI நடத்திய விசாரணைகளில், அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை ஹிண்டன்பர்க் முன்வைத்தது அம்பலமானது. தற்போது பீகார் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு சில நாட்களே இருக்கும் நிலையில், மத்திய அரசின் நற்பெயரை குலைக்கும் வகையில் வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டிருக்கும் செய்தியும், ஹிண்டன்பர்க் ரகமாகவே பார்க்கப்படுகிறது.
