கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி சனாதன தர்மம் குறித்து உதயநிதி பேசிய கருத்திற்கு மறுப்பு தெரிவிக்காமல் எதிர்ப்பு தெரிவிக்காமலும் அமர்ந்திருந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்பதற்காக பாஜக தரப்பில் சென்னையில் போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, '1956 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய திமுகவின் அண்ணா பகுத்தறிவு குறித்த கருத்துக்களை பேசி இறங்கினார் ஆனால் இதற்கு முத்துராமலிங்க தேவர் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததோடு, இதை தெரிவித்த அண்ணா மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை என்றால் மதுரை மீனாட்சி அம்மனுக்கு ரத்தத்தால் அபிஷேகம் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்' என கூறினார்.
இந்த கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்து அதிமுக பாஜக இடையில் கூட்டணி நிகழாது என்ற கருத்து பரவும் அளவிற்கு இது காரணமாக அமைந்தது. மேலும் அண்ணாவின் வரலாற்றை இன்னும் அதிக இடங்களில் நான் கூறுவேன் நான் கூறும் ஒவ்வொன்றிற்கும் என்னிடம் தகுந்த ஆதாரங்கள் உள்ளது இதுவரை நான் கூறிய கருத்து பொய் என்று கூற முடியாது என சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த அண்ணாமலை தெரிவித்தார். இப்படி திமுகவையும் அண்ணாதுரை மற்றும் முத்துராமலிங்கத் தேவரை குறி வைத்து அண்ணாமலை பேசியது தமிழக அரசியலை பரபரப்பாகியுள்ளது. இதன் பின்னணி விசாரித்த பொழுது, எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை அதிமுகவை கைப்பற்றியதிலிருந்து தென் மாவட்டங்கள் குறிப்பாக மதுரை ராமநாதபுரம் தூத்துக்குடி கன்னியாகுமாரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கக்கூடிய தேவர் சமுதாயத்தினர் அதிக அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
அவர்கள் அனைவரும் கண்டிப்பாக திமுக பக்கம் செல்ல மாட்டார்கள், அதிமுகவில் இணைவதற்கும் அல்லது அதிமுக தரப்பிற்கு ஆதரவாக பேசுவதற்கும் அவர்கள் தற்போது தயாராக இல்லை. அதனால் தேசிய கட்சியான பாஜகவில் இணைவதற்கு அவர்களின் சில தலைவர்கள் தமிழக பாஜக தலைமையுடன் பேசியதாகவும் அதற்காகவே பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தேவர் சமுதாயத்தை குறிவைத்து தற்போது இறங்கி உள்ளதாக தெரிகிறது. அதன் காரணமாக தான் அதிமுகவின் கூட்டணியே போனாலும் பரவாயில்லை தென் மாவட்டங்களில் நமது பலம் அதிகரித்துள்ளது தென் மாவட்டங்களே நமது கையில் உள்ளது என அண்ணாமலை இந்த அதிரடி திட்டத்தில் இறங்கி இந்த கருத்துக்களை பொதுவெளியில் தெரிவித்து வருகிறார் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பயந்து போய் எங்களுக்கு கூட்டணி வேண்டுமென்று டெல்லி தலைமையிடம் பேசி வருவதாகவும் தெரிகிறது.
அப்படி பேசும் பொழுதும் இதற்கு மேல் அண்ணாமலையை பாஜக தலைவராக விட்டு வைத்தால் அதிமுகவை விட தமிழகத்தில் பாஜக வேரூன்றிவிடும் எனவே பாஜக மாநில தலைவராக அண்ணாமலையை நீக்கினால் அதிமுக பாஜக கூட்டணி 2024 ஆம் ஆண்டு தேர்தலை சந்திக்கும் என்ற ஒரு நிபந்தனையையும் எடப்பாடி பழனிசாமி தரப்பு டெல்லி தலைமையிடம் முன் வைத்ததாகவும் தகவல்கள் வெளியானது அதற்கு டெல்லி தலைமையும் மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை மாற்ற முடியாது அவர் இன்னும் சில வருடங்களுக்கு தலைவராகவே பொறுப்பு வகிப்பார் தற்போது அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்தும் பாஜகவின் கட்சிக்கு வலு சேர்த்து வருகிறது அதனால் பாஜக மாநில தலைவராக அண்ணாமலையை ஏற்றுக் கொண்டு நீங்கள் கூட்டணியில் இருந்தால் இருங்கள் இல்லையென்றால் செல்லுங்கள் என தலைமை தனது இறுதி முடிவை கூறியதாகவும் அதனால் அதிமுக என்ன செய்வது என்று தெரியாமல் பொதுவெளியில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலையும் தெரிவிக்காமல் விமர்சனங்களை மட்டும் முன்வைத்து வருகிறதாக கூறப்படுகிறது.