24 special

தமிழக அரசியலில் தலைகீழ் திருப்பம் விஜய் திமுக ரகசிய ஒப்பந்தமா சிபிஐ விசாரணைக்கு விஜய் ஒத்துழைப்பாரா ஆட்சிக்கு வந்த ஆபத்து

VIJAY,CBI
VIJAY,CBI

தமிழக அரசியல் களம் எப்போதும் ஒரு திரைக்கதை போலவே திருப்பங்கள் நிறைந்தது, ஆனால் இப்போது அரங்கேறி வரும் காட்சிகள் சினிமா கிளைமாக்ஸை விடவும் அதிர்ச்சிகரமான உண்மைகளைத் தாங்கி நிற்கின்றன. ஊழலை வேரறுப்பேன், பழைய அரசியலை மாற்றிக் காட்டுவேன் என மேடைக்கு மேடை முழங்கிவிட்டு, இன்று அதிகார நாற்காலியில் அமர்ந்திருக்கும் விஜய், உண்மையில் மாற்றத்தின் நாயகனா அல்லது பழைய அரசியலின் புதிய முகமா என்ற கேள்வி எழுகிறது. 108 இடங்களை  பெற்று பெரும்பான்மைக்குத் தேவையான பலத்தை திமுக கூட்டணியில் இருந்து வந்த கட்சிகளின் தயவிலேயே விஜய் தக்கவைத்துக் கொண்டிருக்கிறார். விசிக, இடதுசாரிகள் மற்றும் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளின் ஆதரவு இல்லாமல் விஜய்யின் அரசாங்கம் ஒரு நிமிடம் கூட நீடிக்க முடியாது என்பதே நிதர்சனம். இந்த பலவீனமான பிடியில் ஆட்சியை வைத்திருக்கும் விஜய், இப்போது திமுக மீதான ஊழல் புகார்கள் குறித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும்  கள்ள மௌனம் காப்பதுதான் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


குறிப்பாக, கடந்த திமுக ஆட்சியில்  397 கோடி ரூபாய் டிரான்ஸ்பார்மர் ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டும் கூட, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஒரு வார்த்தை கூடப் பேசாமல் இருப்பது ஏன்? இதுதான் தற்போதைய தமிழக அரசியலின் ஆகப்பெரிய மர்மம். மேடையில் அனல் பறக்கப் பேசியவர், இப்போது கோட்டையில் அமர்ந்து கொண்டு ஏன் இவ்வளவு மென்மையாகச் செயல்படுகிறார்? இதற்குப் பின்னால் இருப்பது வெறும் அரசியல் நாகரிகம் அல்ல, அதிகாரப் பகிர்வு என்ற தந்திரம். செந்தில் பாலாஜி போன்ற திமுகவின் முக்கியப் புள்ளிகள் மீதான இந்த ஊழல் புகாரை விஜய் கையில் எடுத்தால், அவருக்கு ஆதரவு அளித்து வரும் கட்சிகள் உடனடியாகத் தங்களது ஆதரவை வாபஸ் பெற்று ஆட்சியைச் கவிழ்த்துவிடும் என்ற பயம் அவரிடம் குடிகொண்டிருக்கிறது. 

இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், சனாதனத்தை ஒழிப்பேன் என உதயநிதி ஸ்டாலின் பேசியபோது அமைதி காக்கிறார் . அண்மையில் அவர் ஸ்டாலினைச் சந்தித்ததும், அதைத் தொடர்ந்து நிலவும் அரசியல் அமைதியும் 'விஜய்யும் திமுகவும் ஒரே அணியா?' என்ற கேள்வியை மக்கள் மத்தியில் ஆழமாக விதைத்திருக்கிறது. தீய சக்தி என்று யாரைச் சொன்னாரோ, அவர்களுடனேயே கைகோர்த்துக்கொண்டு அல்லது அவர்களின் நிழலில் ஆட்சியை நடத்துவதுதான் அவர் காட்டும் புதிய அரசியலா? 

 சினிமாவில் வில்லன்களைத் துவம்சம் செய்யும் அதே துணிச்சலை நிஜ அரசியலிலும் காட்டி, தனது ஊழல் எதிர்ப்பாளர் என்ற பிம்பத்தைக் காப்பாற்றுவாரா அல்லது அதிகாரத்திற்காகத் தற்போதைய மௌனத்தையே ஆயுதமாக வைத்திருப்பாரா என்பதைத் தமிழக மக்கள் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். திரையில் காட்டிய வேகமும் ஆக்ரோஷமும் அரசியலில் வெறும் அலங்கார வார்த்தைகளாகவே முடிந்துவிடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.