24 special

வாயை விட்டு சிக்கிய அமைச்சர் வன்னி அரசு பதவி பறிப்பா த.வெ.க-வில் உச்சகட்ட பரபரப்பு விஜய் தலைமைக்கு தலைவலியான வி.சி.க

VIJAY,VANNIYARASU
VIJAY,VANNIYARASU

 சமீப காலமாக த.வெ.க கூட்டணிக்குள் எல்லாம் சுமூகமாக இருப்பதாக வெளியே தோன்றினாலும், உள்ளுக்குள் பல்வேறு கருத்து முரண்பாடுகள் உருவாகி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதற்கு சமீபத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டியே காரணமாக அமைந்துள்ளது. “த.வெ.க-வுடன் கூட்டணி வைக்கும் நிலைக்கு நாங்கள் இன்னும் வரவில்லை. தேவைப்பட்டால் அமைச்சரவையிலிருந்து வெளியேறும் முடிவையும் எடுக்கலாம்” என்று அவர் கூறியதும் அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கூட்டணிக்குள் ஏதேனும் பிரச்னை உருவாகிறதா என்ற கேள்விகள் எழத் தொடங்கின. உடனே அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “அண்ணன் திருமாவளவனால் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை” என்று விளக்கம் அளித்து சர்ச்சையை அடக்க முயன்றார்.


ஆனால் உண்மையான சிக்கல் அங்குதான் தொடங்கியதாக கூறப்படுகிறது. சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, “தமிழகத்தில் நடைபெறும் சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும். இதற்காக இந்த சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே முதலமைச்சரிடம் வலியுறுத்துவேன்” என்று வெளிப்படையாகப் பேசினார். சமூக நீதி கோணத்தில் பார்த்தால் இது வரவேற்கத்தக்க கருத்தாக இருந்தாலும், அரசியல் ரீதியாக இந்தப் பேச்சு த.வெ.க தலைமையை சிக்கலில் மாட்டிவிட்டதாக கூறப்படுகிறது.

ஏன் என்றால் இன்னும் சில மாதங்களில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில் ஆணவப் படுகொலைக்கு எதிராக தனிச்சட்டம் கொண்டு வருவது சில பகுதிகளில் அரசுக்கு எதிரான அரசியல் சூழலை உருவாக்கலாம் என்று த.வெ.க மேலிடம் கருதுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால்தான் தற்போது அந்தச் சட்டத்தை கொண்டு வரும் எண்ணத்தில் அரசு இல்லை என கூறப்படுகிறது. ஆனால் அமைச்சர் வன்னி அரசு பொதுவெளியில் இப்படி பேசியதால், பின்னர் சட்டம் கொண்டு வரப்படவில்லை என்றால் “அமைச்சரே கேட்டார், ஆனால் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்கவில்லை” என்ற விமர்சனம் எழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதோடு பிரச்னை முடிவடையவில்லை. தென் மாவட்டங்களில் இந்தப் பேச்சு ஏற்கனவே கடும் விவாதத்தை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. சில சமூக அமைப்புகள் இதை ஆதரிக்கத் தொடங்கியுள்ள நிலையில்,  இந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகளும் அரசியல் ஆயுதமாக பயன்படுத்தலாம் என்ற அச்சமும் நிலவுகிறது. குறிப்பாக பா.ம.க உள்ளிட்ட கட்சிகள், "நாடகக் காதல்", "சாதி மோதல்" போன்ற உணர்வுப்பூர்வமான விவகாரங்களை மீண்டும் களத்திற்கு கொண்டு வந்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம் என உளவுத்துறை எச்சரித்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. வன்னி அரசுக்கு இனி ‘நோ கமென்ட்ஸ்’ சொல்லக் கற்றுக் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது!