
ஒரு காலத்தில் உலக நாடுகளிடம் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் முதலிடத்தில் இருந்த இந்தியாவை, இன்று உலக நாடுகளுக்கே ஆயுதங்களை விற்கச் செய்யும் உலகளாவிய ஏற்றுமதியாளராக மாற்றி வரலாற்றைப் புரட்டிப் போட்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. பாரதப் பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையும், துணிச்சலான கொள்கை முடிவுகளும் இந்திய பாதுகாப்புத் துறையை இன்று உலகமே வியந்து பார்க்கும் ஒரு மாபெரும் ராணுவப் பேரரசாக மாற்றிக் காட்டியுள்ளன. "இனி நம் நாட்டு ராணுவம் பிற நாட்டு ஆயுதங்களை நம்பி இருக்கக் கூடாது" என்ற பிரதமர் மோடியின் 'ஆத்மநிர்பர் பாரத்' மற்றும் 'மேக் இன் இந்தியா' முழக்கங்கள், வெறும் வார்த்தைகளாக இல்லாமல் இந்திய பாதுகாப்புத் துறையில் ஒரு மாபெரும் புரட்சியையே வெடிக்கச் செய்துள்ளன.
2014-ஆம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி என்பது வெறும் சில நூறு கோடிகளில் மட்டுமே சுருங்கிப் போயிருந்த அவல நிலையை மாற்றி, கடந்த நிதியாண்டில் இந்தியாவின் பாதுகாப்புத் துறை ஏற்றுமதியை ₹21,083 கோடி என்ற வரலாற்றுச் சாதனை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது மோடி அரசு. இந்த அசுர வளர்ச்சியின் மூலம் சுமார் 85-க்கும் மேற்பட்ட உலக நாடுகளுக்கு இன்று இந்தியா தனது அதிநவீன ராணுவத் தளவாடங்களை கம்பீரமாக ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்தியாவின் இந்த ராணுவ ஏற்றுமதி வரலாற்றில் மிக முக்கியமான திருப்பமாக அமைந்தது, உலகிலேயே அதிவேக சூப்பர்சோனிக் ஏவுகணையான பிரம்மோஸ் ஏவுகணையை வெளிநாடுகளுக்கு விற்க பிரதமர் மோடி எடுத்த துணிச்சலான முடிவுதான். பிலிப்பைன்ஸ் நாடு இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் செய்தது உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை இமாலய அளவிற்கு உயர்த்தியது. இதுமட்டுமன்றி, இந்தியாவின் ஆகாஷ் ஏவுகணை அமைப்பை வாங்குவதற்கும், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன தேஜாஸ் போர் விமானங்கள் மற்றும் இலகுரக ஹெலிகாப்டர்களை தங்களின் ராணுவத்தில் சேர்ப்பதற்கும் தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் இன்று இந்திய வாசலில் வரிசையில் காத்து நிற்கின்றன.
பிரதமர் மோடியின் அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு முழு சுதந்திரத்தையும், நவீனமயமாக்கலுக்கு ₹2.19 லட்சம் கோடி நிதியையும் வழங்கி, அவற்றின் உற்பத்தித் திறனை அசுர வேகத்தில் உயர்த்தியது மட்டுமல்லாமல், டாடா மற்றும் எல் & டி போன்ற இந்தியாவின் முன்னணி தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களையும் ஆயுத உற்பத்தியில் பங்கேற்கச் செய்து ரெட் கார்பெட் விரித்தது. இதன் விளைவாக, ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்கள் மட்டுமன்றி, இந்திய மண்ணில் தயாராகும் அதிநவீன குண்டு துளைக்காத ஆடைகள், கவச வாகனங்கள், ரேடார்கள், பீரங்கி வெடிமருந்துகள் மற்றும் எல்லையைக் காக்கும் ஆஸில்லா ட்ரோன் தொழில்நுட்பங்கள் என அனைத்தும் சர்வதேசத் தரத்தில் உலக சந்தையை ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. உள்நாட்டு பாதுகாப்பு உற்பத்தியை ₹1.78 லட்சம் கோடி என்ற அசாத்திய எல்லைக்கு கொண்டு சென்று, உலக அரங்கில் இந்தியாவின் இந்த ராணுவ விஸ்வரூபத்தை நிகழ்த்திக் காட்டியது பிரதமர் நரேந்திர மோடி என்ற ஒற்றைத் தலைவனின் இரும்புப் பிடி போன்ற ஆளுமையும் தேசபக்தியுமே ஆகும்.
