
சைவ வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார். அதன்படி பொன்முடியின் சர்ச்சை பேச்சு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ‘பி என் எஸ் சட்டத்தின் படி புகார்கள் குறித்து ஆரம்பகட்ட விசாரணை நடத்தி, அதில் முகாந்திரம் இல்லை என்று தெரிய வந்தால் புகாரை காவல்துறையினர் முடித்து வைக்கலாம். இந்த வழக்கை பொறுத்தவரை பொன்முடிக்கு எதிராக அளிக்கப்பட்ட 124 புகார்களையும் தமிழ்நாடு போலீசார் முடித்து வைத்து விட்டனர்” என்று தெரிவித்தார். பொன்முடி மீதான புகாரை எப்படி முடிக்க முடியும்?என நீமன்றம் கேள்விகளை எழுப்பியுள்ளது
இதையடுத்த நீதிபதி வேல்முருகன், பொதுவெளியில் எவ்வாறு இப்படி எல்லாம் பேச முடியும்? புகார்தாரர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டதா? என்ற கேள்வி எழுப்பினார். இந்த வழக்கை நீதிபதி வேல்முருகன் விசாரித்து வருகிறார். இதற்கு தலைமை வழக்கறிஞர் பிஎஸ்.ராமன், “புகார்தாரர்களிடம் வாக்குமூலம் பெற்று அதன் அடிப்படையில் தான் முடித்து வைக்கப்பட்டன” என்று தெரிவித்தார். இதைக் கேட்ட நீதிபதி வேல்முருகன், ‘புகார்தாரர்கள் உயர் அதிகாரிகளிடம் மேல் முறையீடு செய்யட்டும். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கட்டும்’ என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர், “அரசியல்வாதிகள் மன்னர்கள் கிடையாது. மனுதாரர் மட்டுமல்ல அனைத்து அரசியல்வாதிகளும் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வானமே தங்கள் எல்லை என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்கள். இதுபோன்று பேசுவதை நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. அரசியல்வாதிகளும் அரசியல் சாசனத்தை பின்பற்ற வேண்டும். அவர்களும் குடிமக்களில் ஒருவர் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
பொது வாழ்க்கைக்கு வந்த பிறகு நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வேண்டாதவர்களுக்கு எதிராக புகார் வந்தால் அதில் முகாந்திரம் உள்ளதாக கூறுகிறீர்கள். ஆதரவாளர்கள் என்றால் முகாந்திரம் இல்லை என்று கூறுகிறீர்கள்.
ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் புலன் விசாரணை அதிகாரி தீர்ப்பு எழுத முடியாது. மைக் முன் பேசும் ஒவ்வொருவரும் தங்களை மன்னர்களாக நினைத்துக் கொள்கிறார்கள். இதையெல்லாம் சகித்துக் கொள்ள முடியாது. பொன்முடிக்கு எதிரான புகார்களை முடித்து வைத்து பிறப்பித்த உத்தரவு குறித்து சம்பந்தப்பட்ட புகார் தாரர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் அது தீவிரமாக கருதப்படும்.”என்று கூறினார். இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 1ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்ட தி.மு.க.,வில் மீண்டும் முன்னாள் அமைச்சர் பொன்முடியின் கை ஓங்கியிருப்பது, மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் ஆதரவாளர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளதாக கூறப்படுகிறது. விழுப்புரம் தி.மு.க.,வின் முகமாக செல்வாக்கு மிக்கவராக இருந்த பொன்முடிக்கு, இப்போது எந்த பொறுப்பும் இல்லை.இந்நிலையில், அண்மையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அதை தொடர்ந்து, விழுப்புரம் பகுதியில் 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தை ஒருங்கிணைக்கும் பொறுப்பு, பொன்முடிக்கு வழங்கப்பட்டுள்ளது. கூடவே, அவருக்கு மாநில அளவில் மீண்டும் பொறுப்பு வழங்கப்படும் என தெரிகிறது.இதற்கிடையில் நீதிமன்றம் பொன்முடி மீதான வழக்கை தீவிரப்படுத்தியுள்ளதால் பொன்முடிக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.