
தமிழக அரசியல் வரலாற்றில் சில முடிவுகள் உடனடி தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால் அவை காலப்போக்கில் சமூக அமைதியை கேள்விக்குறியாக மாற்றும். அந்த வகையில், ஹஜ் இல்லம், கிறிஸ்தவ இல்லங்கள் போன்ற மதசார்பு கட்டடங்களை அமைப்பதற்கு இனி மாவட்ட கலெக்டரின் முன் அனுமதி அவசியமில்லை என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்ததாக வரும் செய்திகள், சாதாரண நிர்வாக மாற்றமாகக் கருத முடியாத அளவுக்கு கவலைக்குரியவை.
இந்த அறிவிப்பின் பின்னணியில் உள்ள அரசியல் நோக்கம் என்னவாக இருந்தாலும், அதன் நடைமுறை விளைவுகள் மிகவும் ஆழமானவை. இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதன் பொருள், அனைத்து மதங்களுக்கும் சம மரியாதை அளிப்பதே. எந்த ஒரு மதத்திற்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படக் கூடாது, அதே நேரத்தில் எந்த மதத்திற்கும் அநியாயமான தடைகளும் விதிக்கப்படக் கூடாது என்பதே அதன் அடிப்படை நோக்கமாகும் . அதனால்தான், மதசார்பு கட்டடங்கள் கட்டப்படும் போது மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
கலெக்டர் வழங்கும் அனுமதி என்பது வெறும் நிர்வாக கையொப்பம் அல்ல. அந்த கட்டடம் அரச நிலத்தில் ஆக்கிரமிப்பாக எழுகிறதா, அந்த பகுதி சமூக ரீதியாக, அந்த கட்டடம் எழும்புவதால் சட்டம்–ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதா, பிற மதத்தினரின் வழிபாட்டுக்கும் வாழ்வுக்கும் இடையூறு ஏற்படுமா என்பதனை ஆய்வு செய்து, எல்லாம் சரி என்றால் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நடைமுறை சமூக அமைதியை பாதுகாக்க உருவாக்கப்பட்ட ஒரு பாதுகாப்பு சுவராக செயல்பட்டு வந்தது.
அந்த பாதுகாப்பு சுவரை தளர்த்துவது, இனி மதசார்பு கட்டடங்கள் யாருக்கு எங்கு விருப்பமோ அங்கு எழலாம் என்ற நிலையை உருவாக்கும். ஏற்கனவே அமைதியான பகுதிகளில் கூட, புதிய சர்ச்சைகள் உருவாகும் வகையில் கட்டடங்கள் எழும்பும் அபாயம் அதிகரிக்கும். மற்ற மதங்கள் கோவில் அருகில் கலப்பு மக்கள் வசிக்கும் பகுதிகளில் புதிய கட்டிடங்கள் கட்டுவது திட்டமிட்டு சர்ச்சையை உருவாக்கும் முயற்சிகள் நடக்க வாய்ப்புகளை உண்டாகும். இதன் முடிவில் மத நல்லிணக்கம் பாதிக்கப்படும்; சமூக ஒற்றுமை சிதையும்.
இதை மேலும் கவலைக்குரியதாக மாற்றுவது, நீதிமன்றம் முறைகேடாக கட்டப்பட்ட ஒரு சர்ச்சையை இடிக்க அனுமதி வழங்கியுள்ள நிலையிலும், அந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்தாமல் அரசு காலம் தாழ்த்தி வருவது தான். ஒரு பக்கம் நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்த தயக்கம், மறுபக்கம் மதசார்பு கட்டடங்களுக்கு கட்டுப்பாடுகளை தளர்த்தும் முடிவுகள் – இவை இரண்டும் சேர்ந்து சட்டத்தின் மேல் நம்பிக்கையை குலைக்கும் சூழலை உருவாக்குகின்றன.
சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்பது அரசின் கடமை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் அந்த பாதுகாப்பு, பெரும்பான்மையினரின் அச்சங்களையும் சமூக சமநிலையையும் முற்றிலும் புறக்கணிக்கும் நிலைக்கு சென்றால், அது பாதுகாப்பாக இருக்காது. அது அரசியல் கணக்காக மாறிவிடும். ஒரே சட்டம் அனைவருக்கும் சமமாக செயல்பட வேண்டும் என்பதே ஜனநாயகத்தின் அடிப்படை. ஒரு தரப்பிற்கு விதிகள் தளர்த்தப்பட்டு, மற்றொரு தரப்பிற்கு கடுமையாக அமல்படுத்தப்படும் போது, சமத்துவம் என்ற வார்த்தையே அர்த்தம் இழக்கிறது.
மதசார்பு கட்டடங்களுக்கு கலெக்டர் அனுமதி தேவையில்லை என்ற அறிவிப்பு, ஒரு சாதாரண நிர்வாக சீர்திருத்தமாக அல்ல, சமூக அமைதிக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை மணியாகவே பார்க்கப்பட வேண்டும். அரசியல் வெற்றிக்காக சமூக சமநிலையை ஆபத்துக்குள்ளாக்குவது, ஒரு பொறுப்புள்ள அரசின் அடையாளமாக இருக்க முடியாது. திமுக அரசு தொடர்ந்து இப்படியான ஒருதலைபட்ச முடிவுகளை எடுத்துக் கொண்டே சென்றால், அதன் விளைவுகளை காலம் தவறாமல் அவர்களுக்கு உணர்த்தும். சமூக அமைதி ஒருமுறை சிதைந்தால், அதை மீண்டும் கட்டியெழுப்ப பல ஆண்டுகள் தேவைப்படும். அந்த உண்மையை உணர்ந்து, அரசு தனது முடிவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய தருணம் இதுவாகும்.
