
2026 சட்டசபைத் தேர்தலை நோக்கி தமிழக அரசியல் வேகமெடுத்துள்ள நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) தமிழகத்தில் எடுக்கும் அடுத்த கட்ட மூவ் தெளிவாகி உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் குறித்து எந்தவிதமான மறுப்பும் தெரிவிக்காமல், “கூட்டணிக்காக அரசியல் கட்சிகளுடன் பேசி வருகிறோம்” என்று கூறியிருப்பது, பாஜக வகுத்துள்ள ஒருங்கிணைப்பு உத்தியின் பிரதிபலிப்பு என்றே அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த பின்னர் வெளியான இந்த அரசியல் நிலைப்பாடு, தமிழகத்தில் பாஜக வெறும் ஆதரவுக் கட்சி அல்ல; கூட்டணியின் வடிவமைப்பாளராக செயல்படுகிறது என்பதையே காட்டுகிறது.கூட்டணியில் அரசியலுக்கு நேரடியாக தாக்கம் ஏற்படுத்தக்கூடிய டிடிவி தினகரன் விவகாரத்தில் அதிமுக கதவை திறந்துவைத்திருப்பது, பாஜக வகுத்துள்ள தேர்தல் வரைபடத்தின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது.
பாஜக கணக்கில் முக்கியமானது ஒன்று தான் – தென் தமிழக வாக்குகள் சிதறக்கூடாது. கடந்த சில தேர்தல்களில், குறிப்பாக முக்குலத்தோர் சமூக வாக்குகள் பல திசைகளில் பிளவுபட்டதே, அதிமுக மற்றும் என்டிஏ கூட்டணிக்கு பின்னடைவாக அமைந்தது. 2021 சட்டசபைத் தேர்தலில் அமமுக பெற்ற 2.35 சதவீத வாக்குகள் கூட, அதிமுகவின் வெற்றியை 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தடுத்தது என்பது பாஜக தேர்தல் உத்தி குழுவால் கவனிக்கப்படாத விஷயம் அல்ல.
அதே பிழை மீண்டும் நடக்கக் கூடாது என்பதற்காக, “வெளியில் இருக்கும் வாக்கு சக்தியை உள்ளே கொண்டு வர வேண்டும்” என்ற தெளிவான முடிவை பாஜக எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. டிடிவி தினகரன் தனியாகவோ அல்லது நடிகர் விஜய்யுடன் இணைந்தோ களமிறங்கினால், அது பாஜக–அதிமுக கூட்டணிக்கு நேரடி வாக்கு இழப்பை ஏற்படுத்தும். அதனைத் தவிர்க்க, அமமுகவை என்டிஏ கூட்டணிக்குள் இணைப்பதே பாதுகாப்பான அரசியல் உத்தி என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அரசியல் நகர்வின் மூலம், பாஜக தென் தமிழகத்தில் இரண்டு முக்கிய இலக்குகளை அடைய முயல்கிறது. ஒன்று, முக்குலத்தோர் சமூகத்தில் தனக்கான நம்பக முகங்களை உருவாக்குவது. இரண்டாவது, அதிமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியை சிதறாமல் பாதுகாப்பது. இந்த நோக்கத்திற்காக, டிடிவி தினகரன் மற்றும் நயினார் நாகேந்திரன் போன்ற தலைவர்கள் முன்னிறுத்தப்படலாம். இது பாஜகவுக்கு சமூக அடிப்படையிலான அரசியல் விரிவாக்கத்தை வழங்கும்; அதே நேரத்தில் அதிமுகவுக்கு தேர்தல் நிலைத்தன்மையை உறுதி செய்யும்.
“தேர்தலில் யாரையும் எதிரி, துரோகி என்று பார்க்க தேவையில்லை” என்ற டிடிவி தினகரனின் சமீபத்திய கருத்தும், பாஜக வடிவமைக்கும் கூட்டணி அரசியலுக்கு சாதகமாக அமைந்துள்ளது. தனிப்பட்ட விரோதங்களை ஒதுக்கிவிட்டு, வாக்கு கணக்கை மையமாகக் கொண்ட அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதே பாஜக–என்டிஏயின் தற்போதைய இலக்கு என்பதே இதன் மூலம் தெளிவாகிறது.
மொத்தத்தில், டிடிவி தினகரன் இணைப்பு என்பது அதிமுகவின் அவசரத் தீர்மானம் அல்ல; பாஜக தலைமையில் வடிவமைக்கப்படும் தமிழக என்டிஏ-வின் திட்டமிட்ட தேர்தல் உத்தி. வாக்குகள் சிதறாமல் ஒரே திசையில் செல்ல வேண்டும் என்பதே இந்த நகர்வின் மைய நோக்கம். அந்த வகையில், இந்த கூட்டணி விரிவாக்கம், தமிழக அரசியலில் பாஜக எடுக்கும் மிகக் கணக்குப்பூர்வமான, நீண்டகால strategic move ஆகவே பார்க்கப்படுகிறது.
