24 special

போலீஸை வட மாநிலத்தவர் தாக்கிய சம்பவம்...திமுகவை வறுத்தெடுத்த சீமான்!

seeman, mk stalin
seeman, mk stalin

தமிழ்நாட்டில் காவல்துறையினரையே தாக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனத்தை தெரிவித்துள்ளார். வடமாநில தொழிலாளர்களை கட்டுப்படுத்த முடியாமல் திமில் நாடு அரசு மெத்தனப்போக்காக செயல்படுவது வெட்கக்கேடு என்று சீமான் விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளால புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை அம்பத்தூரில் வட மாநில இளைஞர்கள் ஒருவர்கள் ஒருவர் மாத்தி மாத்தி தாக்கி கொண்டனர்.


இந்த புகார் சம்பந்தமாக அம்பத்தூர் தொழிற்பேட்டை முதல் நிலை காவலர் ரகுபதி என்பவர் அங்கு விசாரிக்க சென்றார். அப்போது அவர்கள் காவல்துறையினர் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் காவலர் ரகுபதி காயமடைந்தார்.இது தொடர்பாக போலீசார் 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும், காவலரை தாக்கும் அளவிற்கு வடமாநில இளைஞர்கள் வளர்ந்து விட்டதாக கண்டனத்தை தெரிவித்து வந்தனர். இந்த வீடியோ சமூக தளத்தில் வைரலானதை அடுத்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீமான் தெரிவித்தது, 

“சென்னை அம்பத்தூரில் வடமாநிலத் தொழிலாளர்களிடையே ஆயுதபூஜை அன்று மதுபோதையில் ஏற்பட்ட மோதலைத் தடுக்கச் சென்ற தமிழக காவலர்களை வட மாநிலத்தவர் கட்டையாலும், கற்களாலும் கடுமையாகத் தாக்கும் காணொளி பெரும் அதிர்ச்சியையும், கடும் கோபத்தையும் ஏற்படுத்துகிறது. கடந்த காலத்தில் உலகின் இரண்டாவது தலைச் சிறந்த காவல் துறை என்ற பெயர்பெற்ற தமிழக காவல் துறை இன்றைக்கு வட மாநிலத் தொழிலாளர்களால் விரட்டி விரட்டி தாக்கப்படும் அளவுக்கு தரம் குறைந்து போயிருப்பது வெட்கக்கேடானது.

கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் இதே போன்று, வடமாநில இளைஞர்கள் காவல் ஆய்வாளர் உட்பட ஏழு தமிழக காவல் துறையினரைக் கடுமையாகத் தாக்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவுக்கு கட்டுக்கடங்காத வன்முறையில் ஈடுபட்டபோதே அதனை நான் கடுமையாக கண்டித்திருந்தேன். அப்போதே தமிழக அரசு உரிய கடுமையான நடவடிக்கைகள் எடுத்திருந்தால் தற்போது அம்பத்தூரில் காவலர் ரகுபதி வடமாநிலத் தொழிலாளர்களால் தாக்கப்பட்டு ஆவடி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவுக்கு பரிதாபகரமான நிலை ஏற்பட்டிருக்காது.

தமிழகத்தில் வட மாநிலத்தவரின் குற்றச்செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதனைத் தடுத்து நிறுத்தாது, கைகட்டி வேடிக்கை பார்க்கும் தமிழக அரசின் அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.கடந்த சில ஆண்டுகளாக வேலைவாய்ப்பு தேடி தமிழகத்துக்கு வரும் வட மாநிலத்தவரின் எண்ணிக்கை பல லட்சக்கணக்கில் அதிகரித்து வருகிறது. சென்னை, திருச்சி, மதுரை, திருப்பூர் போன்ற பெருநகரங்களில் அதிகரிக்கத் தொடங்கிய வட மாநிலத்தவர் ஆதிக்கம் தற்போது தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்களிலும் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது.

இதன் காரணமாக மண்ணின் மைந்தர்களான தமிழர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படுவதோடு, பொருளாதாரமும் பெருமளவு பறிபோகிறது. மேலும், அவ்வாறு வேலைக்கு வரும் வட மாநிலத்தவர்கள் அடுத்த சில மாதங்களிலேயே குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை, இருப்பிட சான்று உள்ளிட்டவை பெற்று நிரந்தரமாக தமிழகத்தில் குடியேறும் நிகழ்வும் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழர்கள் தங்கள் அதிகாரத்தை இழந்து ஏதிலிகளாக மாறும் நிலமாக தமிழகம் மெல்ல மெல்ல மாறிவருகிறது.

அதுமட்டுமின்றி கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல், பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட கொடுங்குற்றச் செயல்களில் வடமாநிலத்தவர்கள் ஈடுபடுவதும், கும்பல் மனப்பான்மையில் பொதுச்சொத்துக்களைச் சேதப்படுத்தும் நிகழ்வுகளும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பொதுமக்கள் பெரும் அச்சத்துடனேயே வாழும் கொடுஞ்சூழலே நிலவுகிறது.திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, நாளுக்குநாள் அதிகரித்த அத்தகைய குற்றச்செயல்களைத் தடுக்கத் தவறிய தமிழக அரசின் அலட்சியப்போக்கே, தற்போது காவல்துறையினரையே கண்மூடித்தனமாகத் தாக்கும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைய முக்கியக் காரணமாகும்.

ஆகவே, தமிழக அரசு இதற்கு மேலாவது விழித்துக்கொண்டு, தமிழகத்துக்குள் பணிக்கு வரும் வெளி மாநிலத்தவரின் எண்ணிக்கை, பணிபுரியும் நிறுவனம், காலம், தங்கும் இடம், அவர்களின் சொந்த முகவரி ஆகியவற்றைப் பதிவு செய்யும் வகையில் உடனடியாக உள்நுழைவு அனுமதிச் சீட்டு (ILP – Inner Line Permit) முறையை நடைமுறைப்படுத்துவதற்கு தனிச் சட்டம் இயற்ற வேண்டுமென்று நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.மேலும் அம்பத்தூரில் தமிழக காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய வடமாநிலத்தவர்கள் அனைவரையும் கைது செய்து சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத் தருவதோடு, அதிகரித்து வரும் வடமாநிலத்தவரின் குற்றச்செயல்களைக் கட்டுக்குள் கொண்டுவந்து தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டுமெனவும் தமிழக அரசினை வலியுறுத்துகிறேன்” என்று சீமான் கூறியுள்ளார்.