
தற்போது தமிழக அரசியல் களம் முற்றிலும் மாறியுள்ளது. திமுக கணக்குகள் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அவர்கள் ஏற்பாடு செய்யும் ஓவ்வொரு விழாவும் அப்பட்டமாக தோல்வியை சந்தித்து வருகிறது. குறிப்பாக தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க, உதயநிதியை வைத்து ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்தது அறிவாலயம். இன்னும் அணி நிர்வாகிகளையே முழுதாகச் சந்தித்து முடிக்காத அந்தக் குழு, கடந்த சில மாதங்களாக முற்றிலும் முடங்கிப்போய்விட்டது. பெரும் விளம்பரத்துடன் தொடங்கப்பட்ட, ‘உடன்பிறப்பே வா’ சந்திப்பு நிகழ்ச்சியும் பெயிலியர் ஆகி உள்ளதால் தான் ரோடு ஷோவில் தந்தையும் மகனும் இறங்கிவிட்டார்கள்.
துணை முதல்வரும், தி.மு.க இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலினும் சுற்றுப்பயணத்தில் குதித்திருப்பது,திமுக உட்கட்சியில் பெரும் பரபரப்பை எகிறச் செய்திருக்கிறது. மேலும் ‘எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில், உதயநிதியின் ஆதரவாளர்களுக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்படப்போவதாக’ அறிவாலயம் பரபரக்கும் நிலையில், ஒவ்வொரு மாவட்டமாக தி.மு.க நிர்வாகிகளைச் சந்திக்கத் தொடங்கியிருக்கிறார் உதயநிதி.
மேலும் கூட்டணியை தக்க வைக்க இந்த முறை தன் எண்ணிக்கையைச் சுருக்கிக்கொண்டு, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்குக் கூடுதல் தொகுதிகளை ஒதுக்கி, அவர்களைத் தக்கவைத்துக்கொள்ளத் தீர்மானித்திருக்கிறது தி.மு.க மேலிடம்
154 இடங்களில்தான் தி.மு.க வேட்பாளர்கள் போட்டியிட முடியும். அப்படி தி.மு.க போட்டியிடும் தொகுதிகளில், 40 தொகுதிகள் உதயநிதியின் ஆதரவாளர்களுக்கு வழங்கப்படவிருக்கின்றன. அதன்படி, தென் தமிழகத்தில் பத்து தொகுதிகள், டெல்டா மண்டலத்தில் ஐந்து தொகுதிகள், கொங்கு மண்டலத்தில் ஐந்து தொகுதிகள், வடமாவட்டங்களில் பத்து தொகுதிகள், சென்னையிலும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களிலும் சேர்த்துப் பத்துத் தொகுதிகள் என்று மொத்தம் 40 சட்டமன்றத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன. அந்தத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலும் தயாராகி இருப்பது திமுக கட்சிக்குள் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது.
மேலும் உதயநிதியின் ‘டார்கெட் 40’ தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க, ஆழ்வார்பேட்டையில் தனியாக ஒரு அலுவலகம் தொடங்கப்பட்டிருக்கிறது. ‘வார் ரூம்’ செட்டப்பில் உருவாகியிருக்கும் அந்த அலுவலகத்தில்தான், 40 தொகுதிகளுக்கும் தனித்தனியாக வியூகங்கள் வகுக்கப்படுகின்றன. உதயநிதியின் ஆதரவாளர்கள் வகைப்படுத்தப்பட்டு, அவர்களில் தகுதியானவர்களை வேட்பாளர் பட்டியலில் சேர்க்கத் தொடங்கியிருக்கிறது அந்த வார் ரூம்..
உதயநிதியின் ‘டார்கெட் 40’ திட்டத்தால், சில சீனியர் அமைச்சர்களும், மாவட்டச் செயலாளர்களுமே பொருமலில் இருக்கிறார்கள். பெரம்பூர் எம்.எல்.ஏ-வாக இருக்கும் ஆர்.டி.சேகரை ஓரங்கட்டிவிட்டு, அவரது தொகுதியைக் குறிவைத்துக் காய்நகர்த்துகிறார் அமைச்சர் சேகர் பாபு. திரு.வி.க.நகரில், உதயநிதியின் ஆதரவாளரான தாயகம் கவிக்குப் போட்டியாக, சென்னை மேயர் பிரியாவைக் களமிறக்கியிருக்கிறார். முதல்வருக்கு நெருக்கமான அமைச்சர் சேகர் பாபுவை மீறித்தான், ஆர்.டி.சேகருக்கும், தாயகம் கவிக்கும் தன் கோட்டாவில் உதயநிதி சீட் பெற்று தரப்போவதால் தற்போதே சேகர் பாபு சென்னையில் வேலைகைளை குறைக்க தொடங்கிவிட்டார்.
இப்படி, தன்னுடைய ஆதரவாளர்களைக் களமிறக்க உதயநிதி டார்கெட் செய்திருக்கும் பல தொகுதிகளில் உட்கட்சிப்பூசல்கள் வெடித்துக் கிளம்புகின்றன. நெல்லை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கடலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பஞ்சாயத்துகளுக்குப் பஞ்சமில்லை. இவற்றையெல்லாம் சரிசெய்தால் மட்டுமே, உதயநிதி தன் டார்கெட்டைக் கைப்பற்றுவது சாத்தியம்
40 தொகுதிகளில் தன்னுடைய ஆதரவாளர்களை வெற்றிபெறவைத்து, சட்டமன்றத்துக்குள் தனக்கான ஒரு பிரத்யேக படையோடு செல்லத் திட்டமிடுகிறார் உதயநிதி. அதற்கான தொகுதிகளைக் கண்டறிந்து, வேட்பாளர்கள் தேர்வுப் பணிகளும் சூடு பறக்கின்றன. ஆனால், உட்கட்சிக்குள் எழுந்திருக்கும் கோஷ்டி மோதலைக் கண்டுகொள்ளாமல் கட்சி மேலிடம் அமைதி காப்பது, பெரும் சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது. “உதயநிதி செல்லும் சுற்றுப்பயணத்தால்கூட எந்தப் பிரயோஜனமும் இதுவரையில் இல்லை...” என ரிப்போர்ட் கூறியுள்ளது.