
முதல்வர் ஸ்டாலின், பேசுகையில் “தடைகளைத் தகர்த்து ‘கம் பேக்’ கொடுத்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி” எனப் புகழாரம் சூட்டினார் , தமிழக அரசியலில் பேசுபொருளானது. “அரசு வேலை வாங்கித்தருவதாகச் சொல்லி முறைகேடு புகாரில் சிக்கி ஜெயிலுக்கு சென்று பெயிலில் வந்தவரை , முதல்வரே இப்படி உச்சி முகர்ந்து பாராட்டினால், முதல்வருக்குக் கீழே செயல்படும் காவல்துறை, முறைகேடு புகாரை எப்படிச் சுதந்திரமாக, அச்சமற்று விசாரிக்கும்..?” என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. அந்தச் சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அடுத்த ஊழல் புகார் சர்ச்சை வெடித்துக் கிளம்பியிருக்கிறது!
397 கோடி டிரான்ஸ்பார்மர் ஊழல் புகாரில் FIR மற்றும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அறப்போர் வழக்கு தொடுத்து இருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரும் பொழுது அக்டோபர் 15 ஆம் தேதி இறுதி வாதம் நடைபெறும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 2021 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (டான்ஜெட்கோ) 45,800 டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் செய்ய, ரூ.1,182.88 கோடிக்கு டெண்டர் கோரியது. இந்த டெண்டர் ஆவணங்களை ஆய்வு செய்தபோது, சுமார் ரூ.397 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.
இந்த முறைகேட்டில் அப்போதைய மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, டான்ஜெட்கோ தலைவர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்டோருக்கும் தொடர்பு இருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து ஊழல் தடுப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், இந்த வழக்கை உயர் நீதிமன்ற கண்காணிப்பில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அறப்போர் இயக்கம் கோரியிருந்தது.
இந்த வழக்கு வியாழக்கிழமை நீதிபதி என். சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுரேஷ், “36 ஒப்பந்ததாரர்கள் தங்களின் டெண்டர் ஒப்பந்தங்களில் ஒரே விலையைக் குறிப்பிட்டுள்ளனர், பைசா அளவில் கூட மாற்றம் இல்லை” என்று வாதிட்டார். அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கின் இறுதி விசாரணையை அக்டோபர் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
‘டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதல் விவகாரத்தில் இதுவரை வெளிச்சத்துக்கு வந்திருப்பது சிறு துளியளவுதான்’ என்கின்றன மின்சாரத்துறை வட்டாரங்கள். நம்மிடம் பேசிய அந்தத் துறையின் அதிகாரிகள் சிலர், “தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு மட்டும், சுமார் 50,000-க்கும் அதிகமான டிரான்ஸ்ஃபார்மர்கள் கொள்முதல் செய்யப்பட்டிருக்கின்றன. அதற்காக, சுமார் 40 டெண்டர்களுக்கும் மேல் விடப்பட்டிருக்கின்றன. அவற்றில் 95 சதவிகித டெண்டர்களைக் குறிப்பிட்ட சில நிறுவனங்கள்தான் எடுத்திருக் கின்றன. அந்த டெண்டர்களையும் முழுவதுமாக ஆராய்ந்தால், பெரும் பூதமே வெளியே வரும்” என்கிறார்கள்.
ஊழல் சர்ச்சைக்குரிய தொகைகளைக் கணக்கிட்டால், மூளையில் ஷாக் அடிக்கிறது. பண முறைகேடு புகாரில் சிறைக்குச் சென்று ஜாமீனில் வந்திருக்கும் செந்தில் பாலாஜி மீது, அடுத்தடுத்து ஊழல் புகார்களை முன்வைத்து வருகின்றன அரசியல் கட்சிகளும், தன்னார்வ அமைப்புகளும். தற்போது வெடித்திருக்கும் டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதல் முறைகேடு புகார், பாலாஜிக்கு ஷாக் கொடுக்காமல் விடாது!