24 special

ஆயிரம் வெட்டுக்கள் ..! பாகிஸ்தானை எச்சரித்த மத்திய அமைச்சர்..!

Rajnath singh
Rajnath singh

ஜம்முகாஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பாதுகாப்பு நிலைமையை கண்காணிக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டுநாள் பயணமாக நேற்று ஸ்ரீநகர் வந்தடைந்தார். அவரை ராணுவத்தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே வடக்கு தளபதி உபேந்திரா மற்றும் ஜெனரல் அவுஜ்வாலா, காலாட்படை மேஜர் ஜெனரல் அஜய் சந்த்பூரியா ஆகியோர் கண்காணிப்புநிலைக்கு அழைத்துச்சென்றனர்.


அங்கு சவாலான சூழ்நிலைகள் எதுவாயினும் பாதுகாப்புப்படைகள் தங்களது பொறுப்புக்களை உணர்ந்து திறம்பட செயல்படுவதாக பாராட்டியுள்ளார். மேலும் பாராமுல்லா பகுதியில் பாதுகாப்பு படையினர் மத்தியில் பேசிய அவர் அமைச்சர் ராஜ்நாத் சிங்  "பாதுகாப்பு படை வீரர்களின் வீரம் மற்றும் வைராக்கியம் பாராட்டத்தக்கது. அசாத்திய துணிச்சலுடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் நாட்டுக்கு சேவையாற்றி வருகின்றனர்.

இந்திய மக்களிடையே குறிப்பாக நமது இளைஞர்களிடையே தேசபக்தியை விதைக்கும் பாதுகாப்பு வீரர்களை நினைத்து பெருமிதம் கொள்கிறேன். உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்ற செய்தியை உலகுக்கு அறிவித்த அமைதியை விரும்பும் நாடு இந்தியா. நாங்கள் எந்த ஒரு நாட்டையும் காயப்படுத்த விரும்பவில்லை.

யாருடைய ஒரு அங்குல நிலத்தை கூட நாங்கள் கைப்பற்ற முயற்சிக்கவில்லை. ஆயுதப்படை பி.எஸ்.எப் மற்றும் சிஆர்பிஎப் காவல்துறையினரின் கடும் அயராத முயற்சியால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத நடவடிக்கை பெருமளவு குறைந்துள்ளது. எங்கள் பாதுகாப்பு படைகள் நாட்டிற்கு பாதுகாப்பு கவசமாக இருக்கின்றன. 

அதை உடைக்க முற்படுவோர் யாராக இருந்தாலும் அவர்களின் ரத்தம் தரையில் சிந்தும். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து அமைதியை சீர்குலைக்க பாகிஸ்தான் முயன்றுவருகிறது. இந்தியாவில் ஆயிரம் வெட்டுக்கள் என்ற அணுகுமுறையின்மூலம்  தொடர் முயற்சி நடைபெற்று வருகிறது. ஆனால் நமது ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை காயப்படுத்த முயற்சித்தால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும். 

நமது அண்டைநாடுகள் எப்போதுமே இந்தியாவிற்கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது. பாதுகாப்பு படைகள் நிச்சயமாக பதிலடி கொடுக்கும்" என வீரர்கள் மத்தியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாற்றினார்.