24 special

அதிமுகவில் வெடிக்கும் பிரச்சினை!! ஆரம்பித்தது கலகம்...! வேலுமணியின் கருத்தை மறுத்து பேசிய ஜெயக்குமார்... கட்சிக்குள்ளே இப்படி ஒரு பிரச்சனையா?

admk
admk

அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மறைந்த பிறகு ஒரு சீரிய நிலைபாட்டை அதிமுகவால் பெற முடியாமல் தத்தளித்து வருகிறது. அன்று எம்ஜிஆரை இழந்த அதிமுகவை தூக்கி நிறுத்தி, கட்டுக்குள் வைக்க ஜெயலலிதா இருந்தார். ஆனால் இன்று ஜெயலலிதாவை போன்று அதிமுகவை தூக்கி நிறுத்த யாரும் இல்லையா என்பது அக்கட்சியின் அடிமட்ட தொண்டர்களின் குமுறலாக உள்ளது. ஏனென்றால் ஜெயலலிதாவை இழந்த அதிமுக இரண்டாகப் பிரிய அந்த இரண்டும் தற்போது மூன்றாகப் பிரிந்து சிதறி கிடக்கிறது. இருப்பினும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக பாஜகவின் கூட்டணியில் இருந்து ஒரு நிலையான மாநில கட்சியாக பார்க்கப்பட்டு வந்தது. 


ஆனால் தற்பொழுது அதுவும் இல்லாமல் தமிழகத்தில் அதிமுகவிற்காக இப்படி ஒரு நிலைமை என எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் மற்றும் அவர்களை தங்கள் தலைவர்களாக ஏற்ற மக்களும் வேதனை தெரிவித்து வருகின்றனர். அப்படிப்பட்ட ஒரு சரிவை நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் அதிமுக கண்டுள்ளது. முன்னதாக பாஜக மற்றும் அதிமுகவிற்கு இடையே இருந்த சில புகைச்சல் காரணமாக அதிமுக பாஜகவின் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தது. மேலும் லோக்சபா தேர்தலில் நாங்கள் தனியாக நின்று ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுப்பதை பாஜகவும் இந்த தமிழகமும் பார்க்கும் என பல வீரவசனங்களை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறைகூவல் விட்டார். 

ஆனால் தேர்தல் முடிவுகளில் அவர்களுக்கு கிடைத்ததோ பெரும் ஏமாற்றம் மட்டுமே பெரும்பாலான தொகுதிகளில் மூன்றாம் இடத்திற்கும் தள்ளப்பட்டு கிட்டத்தட்ட 10 தொகுதிகளுக்கு மேல் டெபாசிட்டை இழந்து பரிதாப நிலையில் உள்ளது. இதனால் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் முதல் சில மூத்த அமைச்சர்கள் வரை அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருப்பதாகவும் இனி இவரை நம்பி பிரயோஜனம் இல்லை நாம் நடை கட்ட வேண்டியதுதான் என பல முடிவுகளை எடுக்க ஆரம்பித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அதே சமயத்தில் தமிழகத்தில் எந்த திராவிட கட்சியுடனும் கூட்டணி அமைத்துக் கொள்ளாமல் தன் தலைமையில் கூட்டணியை அமைத்து பாஜக தமிழகத்தில் பல தொகுதிகளில் இரண்டாம் இடத்தை பிடித்து திமுக மற்றும் அதிமுகவிற்கு நிகரான ஒரு கட்சியாக உருவெடுத்துள்ளது. 

இதனை அடுத்து பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய கோவையின் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி, பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகி வந்ததற்கு அண்ணாமலை தான் காரணம்! ஒருவேளை அதே கூட்டணி நீடித்திருந்தால் இன்று 30 முதல் 35 இடங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்திருக்கும் என்று கூறினார். எஸ் பி வேலுமணியின் இந்த பேச்சு அதிமுக மூத்த தலைவர்கள்  இடையே முகசுழிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், 2026 தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தை ஆட்சி செய்ய போவது அதிமுக தான்! எஸ் பி வேலுமணி கூறியது ஒரு அனுமானத்தில் கூறப்பட்டது. ஒரு அனுமானத்தில் கூறப்பட்டதற்கு நான் பதில் கூற வேண்டுமா?? அதோடு அதிமுக பாஜக கூட்டணி விலகல் என அறிவிக்கும் பொழுதே இப்போதும் இல்லை எப்போதும் இல்லை என தீர்மானிக்கப்பட்டு தான் அறிவிக்கப்பட்டது. அதில் 2026 அடங்கும்!! தமிழ்நாட்டில் இனிமேல் இலையும் தண்ணீரும் ஒட்டாது மொத்தமாக பாஜகவை கெட் அவுட் என வெளியேற்றினோம். 

எஸ் பி வேலுமணி பேசியது அவருடைய நிலைப்பாடு கட்சிக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ஒரே போடாக பத்திரிக்கையாளர்கள் மத்தியில் போட்டுடைத்தார் ஜெயக்குமார். இப்படி ஒரே கட்சியை சேர்ந்த இரண்டு முன்னாள் அமைச்சர்கள் மாறி மாறி கருத்துக்களை முன்வைத்ததால் கட்சிக்குள்ளும் இதுபோன்று இரு தரப்பு வாதங்கள் முளைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி அதிமுக இன்னும் பல சில்லுகளாக உடைவதற்கான நேரமும் சூழ்நிலையும் கட்சிக்குள் நிலவுவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.