உத்திரபிரதேசம் : இந்தியாவின் பல மாநிலங்களில் ஆயுதப்படைக்கான அக்னிபாத் திட்டத்தின் மூலம் ஆள் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டக்காரர்கள் வன்முறையில் இறங்கியுள்ளனர். இது எதிர்க்கட்சிகளின் தூண்டுதலின் பேரிலேயே நடைபெறுவதாக ஆளும் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.
முன்னாள் ராணுவ தளபதிகள் மற்றும் லெப்டினென்ட் ஜெனரல்கள் என இந்திய ஆயுதப்படைகளை சேர்ந்த பல் உயரதிகாரிகள் இந்த திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியும் அக்னிபாத் திட்டத்தின் மூலம் சேர்பவர்களுக்கு விமானப்படை கப்பற்படை மற்றும் ராணுவம் மற்றும் பொதுத்துறை ஆயுத்தநிறுவனங்களில் சேர முன்னுரிமை வழங்கப்படும் என கூறியும் போராட்டத்தில் ஈடுபடுவது உள்நோக்கத்துடன் கூடிய போராட்டமாகவே தெரிகிறது என பெயர்குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் உத்திரபிரதேச பிஜேபி தலைவர்கள் பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு போராட்டத்தை கைவிடச்சொல்லியும் வீண்வதந்திகளில் வீழ்ந்துவிடவேண்டாம் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுகுறித்து உத்திரபிரதேச போக்குவரத்துத்துறை அமைச்சர் தயா சங்கர் சிங் கூறுகையில் " அக்னிபாத் திட்டம் குறித்து பரப்பப்படுகின்ற கட்டுக்கதைகளை இளைஞர்கள் நம்பவேண்டாம்.
நான் மாநிலத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இது இளைஞர்களுக்கு சிறந்த பயிற்சிக்கான வாய்ப்பை உருவாக்கி தருகிறது. முன்னுரிமை அடிப்படையில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும். இந்த திட்டம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த மற்றும் இளைஞர்களின் சந்தேகங்களை போக்க பல்லியா தொகுதியில் அதிகாரிகள் குழுவை நியமித்துள்ளேன்" என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மாநில முதல்வர் திரு. யோகி ஆதித்யநாத் தனது ட்விட்டரில் " பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் பேரில் 2022க்கான அதிகபட்ச வயதை 21இலிருந்து 23ஆக உயர்த்துவதற்கான நடவடிக்கை வரவேற்கத்தக்க ஒரு முடிவு. இளைஞர்களிடையே நம்பிக்கையையும் உற்சாகத்தையும் உருவாக்கும் இத்தகைய பிரதமருக்கு நன்றி" என பதிவிட்டுள்ளார்.
மேலும் மாநில அரசு அக்னிபாத் திட்டத்தில் இளைஞர்கள் சேர்வதை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவில் சிறப்புப்படைகள் மற்றும் காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடக்கையில் இந்த புதிய திட்டத்தின் மூலம் பயிற்சிபெற்ற விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இது மாநில இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.