அமர்நாத் : ஹிந்துக்களின் புனித ஸ்தலமான இமயமலையில் 3800 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் பனிக்கோவிலுக்கு செல்லும் புனித யாத்திரை ஜூன்30 முதல் தொடங்கியுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் சிவனின் தரிசனம் காண புனிதயாத்திரையை தொடங்கியுள்ளனர்.
அமர்நாத் யாத்திரையில் பக்தர்கள் சில பாலங்களை கடக்கவேண்டியுள்ளது. அதனால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இரண்டு பாலங்களை இந்திய ராணுவத்தின் ஒரு பிரிவான சினார் கார்ப்ஸ் அந்த இருபாலங்களையும் ஒரே இரவில் சீரமைத்துள்ளது. மேலும் அதன் வீடியோவும் சமூகவலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
திடீர் வெப்பநிலை அதிகரிப்பால் உண்டான நிலச்சரிவில் பால்டால் அச்சில் அமைந்துள்ள ப்ராரிமார்க் பகுதியில் உள்ள பாலங்கள் மிகுந்த சேதமைடைந்தன. இதனால் பக்தர்களை பாதுகாக்கவும் பாதயாத்திரை சுமூகமாக நடக்கவும் சினார் கார்ப்ஸ் நிர்வாகத்திற்கு உதவி செய்து வருகிறது. இதுதொடர்பாக இந்திய ராணுவத்தின் சினார் கார்ப்ஸ் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளது.
அதில் பாறைகள் நிறைந்த நிலப்பரப்பில் ராணுவ வீரர்கள் புனரமைப்பு பணியில் ஈடுபட்டு வருவதை காணமுடிந்தது. பழுதடைந்த மற்றும் விரிசல் விழுந்த பாலங்களை சீரமைக்க சிவில் நிர்வாகம் சினார் கார்ப்ஸிற்கு கோரிக்கை எழுப்பியது. அதைத்தொடர்ந்து சினார் கார்ப்ஸின் 13 பொறியாளர் கொண்ட ரெஜிமென்ட் கடுமையான பனிப்பொழிவு வானிலை மற்றும் கும்மிருட்டு ஆகியவற்றை பொருட்படுத்தாமல் புதிய பாலங்களை அமைத்தது.
இதனால் தடைசெய்யப்பட்ட யாத்திரை மீண்டும் அதிகாலையில் தொடங்கபட்டது. இதன்மூலம் பக்தர்களுக்கு பாதுகாப்பு உணர்வை இந்திய ராணுவம் எங்கும் எப்போதும் வழங்கமுடியும் என மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியிருப்பதாக சிவில் நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.