கேரளா : கடந்த சிலதினங்களுக்கு முன்னர் உத்திரபிரதேச பிஜேபி தலைவர் நுபுர் ஷர்மா நபிகள் நாயகம் பற்றி அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக கூறி கான்பூர் பகுதியில் வன்முறை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து எழுந்த கண்டனங்களால் நுபுர் ஷர்மா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தற்போது இஸ்லாமியநாடுகள் தலையிட ஆரம்பித்துள்ளன.
கத்தார் இந்தோனேசியா மற்றும் அரபுநாடுகள் இந்த விவகாரத்தில் இந்தியா பொதுமன்னிப்பு கோரவேண்டும் என குரல்கொடுக்க ஆரம்பித்துள்ளன. இஸ்லாமிய நாடுகள் இதுபோல உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது புதிதல்ல என்றாலும் பொதுமன்னிப்பு கேட்கவேண்டும் என கோரிக்கை விடுத்திருப்பது இந்திய அரசை மட்டுமல்ல இந்திய மக்களையும் எரிச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.
இந்நிலையில் நேற்று கத்தார் கூறிய கருத்துக்களுக்கு கேரளா கவர்னர் ஆரிப் கான் பதிலடி கொடுத்துள்ளார். புதுதில்லியில் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் " காஷ்மீர் உள்ளிட்ட இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியாவுக்கு எதிராக பேசிய பலநாடுகள் உள்ளன. மக்கள் தாங்கள் கூறிய கருத்துக்களுக்கு உரிமையுள்ளவர்கள். இதில் என்ன முக்கியத்துவம் இருக்கிறது.
கத்தாரிடம் பகிரங்க மன்னிப்பெல்லாம் கேட்கமுடியாது. அதை ஒதுக்கித்தள்ளுங்கள். இதுபோன்ற சிறிய எதிர்வினைகளை பற்றியெல்லாம் இந்தியா கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. எங்கள் பாரம்பரியம் சகிப்புத்தன்மை மட்டுமே அல்ல. ஆனால் அனைத்து மரபுகளுக்கு மரியாதை அளிக்கிறோம். எல்லா மரபுகளையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
இந்தியாவின் கலாச்சாரம் யாரையும் அடுத்தவர்களாக பார்க்காமல் எங்களில் ஒருவராக பார்ப்பதே. பிரதமரும் ஆர்.எஸ்.எஸ்ஸும் திரும்ப திரும்ப சொல்லும் ஒவ்வொரு வார்த்தையிலும் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் பாரம்பரியம் கலாச்சாரம் வலுப்பெற வேண்டும். யாரும் ஒதுக்கப்பட்டுவிடக்கூடாது. இது நமது கலாச்சாரம்" என கவர்னர் ஆரிஃப் கான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.