ஹைதராபாத் : கடந்த மே 28 அன்று ஹைதராபாத் பகுதியில் அமைந்துள்ள பப் ஒன்றிற்கு 17 வயது சிறுமி மதுவிருந்துக்கு சென்றுள்ளார். அவரிடம் லிப்ட் கொடுப்பதாக கூறிய ஐந்து சிறுவர்கள் ஜூபிலி ஹில்ஸ் பகுதிக்கு அழைத்து சென்று கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் நான்கு சிறுவர்கள் ஈடுபட்டிருந்தது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தது.
மேலும் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களில் அசாதுதீன் ஒவைசியின் கட்சியை சேர்ந்த ஒருவரின் மகன் மற்றும் ஆளும்கட்சி அமைச்சர் ஒருவரின் மகன் என இரு முக்கியப்புள்ளிகளின் பெயர் அடிபட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை நான்குபேர் கைதுசெய்யப்பட்ட நிலையில் இன்னும் சிலரை போலீசார் தேடிவருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தெலுங்கானா பிஜேபி சட்டமன்ற உறுப்பினரான எம்.ரகுநந்தன் ராவ் மீது பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளங்களை வெளிப்படுத்தியதாக போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.புகாரின் அடிப்படையில் ரகுநந்தன் மீது 228 ஏ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஜூன் 4 அன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் "அந்த வீடியோவில் இருப்பவர் AIMIM எம்.எல்.ஏவின் மகன்" என கூறியிருந்தார்.
மேலும் அந்த சிறுவன் குற்றச்செயலில் ஈடுபட்டதை நிரூபிக்க தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளங்களை புகைப்படமாகவும் வீடியோவாகவும் ரகுநந்தன் வெளியிட்டதாக கூறி போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். ஆனால் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பாதிக்கப்பட்ட சிறுமியின் முகம் தெளிவாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் குற்றச்செயலில் ஈடுபட்ட சிலர் அரசியல் பிரமுகர்களின் வாரிசுகள் என்பதால் வழக்கை காவல்துறையும் மாநில அரசும் வேறுதிசைக்கு மாற்றிவருவதாகவும் தொடர்புடைய குற்றவாளிகளை தப்பிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாகவும் எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர்.