24 special

உட்கட்சி பூசல்..! அமைச்சரை புறக்கணித்த முதல்வர்..! பற்றியெரிந்த வீடுகள்..!

Mamata banerjee
Mamata banerjee

மேற்குவங்கம் : கேரள அரசியலை விட மேற்குவங்க அரசியல் மக்களை எப்போதும் அச்சத்திலேயே வைத்திருப்பதாக குற்றச்சாட்டுக்கள் பல வருடங்களாக எழுந்துவந்த நிலையில் உட்கட்சி பூசலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் திரிணாமூல் காங்கிரஸ் மீதான மக்களின் பயத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது என திரிணாமுல் தலைவர்களே புலம்பிவருகின்றனர்.


மேற்குவங்க மாநில மமதாவின் அமைச்சரவையில் அமைச்சராக இருப்பவர் ஜாவேத் அஹம்மது. இவரது தொகுதியான கஸ்பாவில் ஏற்பட்ட உட்கட்சிப்பூசலால் பொதுமக்களின் வீடுகள் சூறையாடப்பட்டன. இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உண்டுபண்ணியுள்ளது. கஸ்பா தொகுதியில் கவுன்சிலராக இருப்பவர் சுஷாந்த் கோஷ்.

சுஷாந்த் கோஷின் ஆதரவாளர்கள் அமைச்சர் ஜாவேத் அஹம்மது கானின் ஆதரவாளர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து கட்சி தொண்டர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதோடு பொதுமக்களின் சொத்துக்களையும் சேதப்படுத்தியுள்ளனர். பதட்டமான சூழல் உருவானதை தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து மாநில பேரிடர்மேலாண்மை அமைச்சர் ஜாவேத் அஹம்மது கான் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். இது மமதாவுக்கு கடும் எரிச்சலை கிளப்பியது. அதனால் திங்கட்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் ஜாவேத்தை முதலமைச்சர் மமதா முற்றிலும் புறக்கணித்தார்.

மேலும் அமைச்சரவை கூட்டத்தில் பேசும்போது அமைச்சர்கள் யாரும் "சக தலைவர்களை பற்றியோ தொண்டர்களை பற்றியோ பொதுவெளியில் முரண்பட்ட கருத்துக்களை கூறவேண்டாம்" என தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து பேசிய அமைச்சர் ஒருவர் " ஜாவேத் கானின் எதிர்மறையான பேச்சு முதல்வரை கோபமடைய செய்துள்ளது. அதனாலேயே அவர் புறக்கணிக்கப்பட்டார்" என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் ஜாவேத் கான் உடனடியாக பதவி விளக்கவேண்டும் என சுஷாந்த் கோஷ் தரப்பினர் போர்க்கொடி தூக்கிவருகின்றனர். ஏற்கனவே கொல்கத்தா உள்ளிட்ட சில இடங்களில் அடுத்தடுத்து உட்கட்சி பூசல் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்திய அமித்ஷாவின் வருகைக்கு பிறகு திரிணாமுல் காங்கிரசில் உட்கட்சி பூசல் நடைபெறுவது அரசியல் விமர்சகர்களை சந்தேக கண்ணோடு பார்க்கவைத்துள்ளது.