அண்ணாமலை கையில் இருந்த வாட்ச்சை வைத்து அரசியல் செய்ய நினைத்த திமுகவிற்கு அவர் கொடுத்த பதிலடி சாட்டையடியாக விழுந்துள்ளது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் வாட்ச்சின் விலை சுமார் 3 லட்சம் என்றும், அதனை வெளிநாட்டு நிறுவனத்திடம் இருந்து வாங்கியுள்ளார் என்றும் கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் உ.பி.க்கள் பரப்பி வந்தனர். அத்துடன் நிற்காமல் “ஐபிஎஸ் வேலை பார்க்கும் போது வாங்கியதா?”, “ஆடு விற்று வாங்கியதா?” என்றெல்லாம் ஓவராக பேசி வந்தனர். இதனால் பாஜக தொண்டர்கள் உச்சகட்ட கொதிப்படைந்த போதும், அண்ணாமலை அமைதி காத்து வந்தார்.
இதனிடையே கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, "நான் கையில் கட்டியிருக்கக்கூடிய வாட்ச் ரஃபேல் போர் விமானத்தின் பாகங்களிலிருந்து தயாரிக்கப்பட்டது. உலகத்தில் இந்த வகை வாட்ச் 500 மட்டும் தான் உள்ளது. அதனால் என் உடம்பில் உயிர் உள்ளவரை இந்த வாட்ச் என்னிடம் இருக்கும். ரஃபேல் விமான வாட்சை நம்மை தவிர வேறு யார் வாங்குவார்கள்? நம்முடைய நாட்டிற்காக இந்த வாட்சை கட்டியுள்ளேன்.
ஏனென்றால் நான் தேசியவாதி. ரஃபேல் நம்முடைய நாட்டிற்கு கிடைத்திருக்கக்கூடிய மிகப்பெரிய பொக்கிஷம். ரஃபேல் விமானம் வந்தபிறகு இந்தியா உலக அளவில் பேசப்படுகிறது.
இந்த வாட்சில் ரஃபேல் விமானம் புகைப்படம் இடம்பெற்றிருக்கும். மொத்தமுள்ள 500 வாட்ச்களில் 149-வது வாட்சை நான் கட்டியிருக்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம். எனக்கு பிடித்ததை நான் செய்கிறேன். இந்தியாவினுடைய எதிரிகள் இந்தியாவிலேயே சில கட்சிக்குள் ஊடுருவி இருக்கிறார்கள்.
இந்தியா பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறக்கூடாது என்பதற்காக சீனா மற்றும் பாகிஸ்தானுடைய ஏஜெண்டாக அவர்கள் செயல்படுகிறார்கள்.அவர்களுக்கு என்னுடைய பதில், இது பழைய இந்தியா அல்ல மோடி ஜியின் புதிய இந்தியா. அடித்தால் நாங்கள் திருப்பி அடிப்போம்.” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பாஜக சார்பில் 9 புகார்கள் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கொடுத்துள்ளோம்.. அரசின் அழுத்தத்தால் வழக்கு இல்லாமல் போகிறது தற்போதும் அ.ராசா 2 ஜி குற்றவாளி என்பதை மறந்து விடக் கூடாது என்றும் , தமிழகத்தின் நம்பர் ஒன் நடிகர் தமிழக முதல்வர் தான் என்றும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
கோவை கிணத்துக்கடவு பகுதிகளில் கனிமவள கொள்ளை அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர், பாஜக தொடர் போராட்டங்களை கையில் எடுக்கும் என எச்சரித்தார்.
ஒவ்வொரு நாளும் விலைவாசி உயர்வை மக்கள் சந்திப்பதாக கூறிய அண்ணாமலை, அமுல் நிறுவனத்தில் வரும் லாபத்தில் 82 சதவிகிதம் விவசாயிகளுக்கு செல்கிறது. ஆவின் நிறுவனம் அப்படி நடந்துகொள்ளவில்லைஆவின் நிறுவனம் தொடர்ந்து நஷ்ட்டத்தில் சென்று கொண்டிருக்கிறது. திமுக அமைச்சர் ஒருவரின் பால் நிறுவனம் ஊக்குவிக்கப்படுகிறது என்றும் குற்றச்சாட்டியுள்ளார்.