
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இஸ்ரேல் பயணம், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்துள்ளது. டெல் அவிவ் விமான நிலையத்தில் அவர் தரையிறங்கியது முதலே, இஸ்ரேல் நாடு அவருக்கு அளித்த வரவேற்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், இந்தியப் பண்பாட்டிற்கு மதிப்பளிக்கும் வகையில் காவி நிற உடை அணிந்த அவரது மனைவி சாராவும் நேரில் வந்து மோடியை வரவேற்றனர். இந்தத் தருணத்திற்குப் பிறகு இஸ்ரேலில் ஒரு "மோடி விழா"வே அரங்கேறியது எனலாம். நெதன்யாகு மேடையில் பேசுகையில், "மோடி என் நண்பர் மட்டுமல்ல, அவர் எனது பாசமான சகோதரர்" என உரக்க அறிவித்தபோது, அங்கு கூடியிருந்த மக்கள் "மோடி மோடி" என விண்ணதிர முழக்கமிட்டனர். இஸ்ரேலியப் பாரம்பரியமான 'ஹோரா' நடனத்துடன் உற்சாகமாக வரவேற்கப்பட்ட மோடியை, பின் அந்நாட்டின் நாடாளுமன்றமான 'நெஸட்' (Knesset) கௌரவித்தது.
பிரதமர் மோடியின் வருகையைச் சிறப்பிக்கும் விதமாக, இஸ்ரேலின் மிக முக்கிய அடையாளக் கட்டடங்கள் அனைத்தும் இந்திய மூவர்ணக் கொடியின் வண்ணத்தில் ஒளியூட்டப்பட்டு ஜொலித்தன. இதில் நெஸட் நாடாளுமன்றக் கட்டடமும் அடங்கும். இஸ்ரேல் தனது மிக நெருக்கமான மற்றும் உறுதிப்படுத்தப்பட்ட நட்பு நாடுகளுக்கு மட்டுமே வழங்கக்கூடிய இந்த உயரிய கௌரவத்தை மோடிக்கு வழங்கியது. அங்கு உரையாற்றிய மோடி, இந்தியாவும் இஸ்ரேலும் ஒருசேர பயங்கரவாதத்தால் எதிர்கொள்ளும் சவால்களை மையமாக வைத்துப் பேசினார். குறிப்பாக, 2023 அக்டோபரில் ஹமாஸ் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மிகக் கடுமையாகக் கண்டித்த அவர், பகல்ஹாம் தாக்குதலின் போது இஸ்ரேல் இந்தியாவுடன் உறுதுணையாக நின்றதை நன்றியுடன் நினைவு கூர்ந்தார். "பயங்கரவாதத்திற்கு எதிராக எங்கள் சகிப்புத்தன்மை பூஜ்ஜியம்" என அவர் முழங்கியபோது, அந்த அவை முழுவதும் பெரும் ஆரவாரத்துடன் அதை வரவேற்றது. எந்த ஒரு இந்தியப் பிரதமரும் இஸ்ரேலிய மண்ணில் நின்று இவ்வளவு ஆணித்தரமாகப் பயங்கரவாதத்தை எதிர்த்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தனது உரையில், கடந்த 2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒன்பது வருட இடைவெளியில் இந்தியா அடைந்துள்ள அபாரமான மாற்றங்களை மோடி பட்டியலிட்டார். கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், அவர் எங்கும் "என் அரசு" அல்லது "எங்கள் கட்சியால்" என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தாமல், "இந்தியா வளர்ந்தது, இந்தியா முன்னேறியது, எங்கள் தேசம் தன்னை பாதுகாத்துக் கொண்டது" என்றே பெருமிதத்துடன் குறிப்பிட்டார். இது அவர் பெற்ற ஆர்.எஸ்.எஸ் அடிப்படைப் பயிற்சியின் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது. 140 கோடி மக்களின் பிரதிநிதியாகத் தான் அங்கு நிற்பதாகவும், இந்தியாவுக்கு இஸ்ரேல் செய்யும் அனைத்து உதவிகளுக்கும் இந்திய மக்கள் சார்பாக நன்றியையும் அவர் தெரிவித்தார்.
இந்த உரையால் கவரப்பட்ட இஸ்ரேலிய நாடாளுமன்றம், ஏகோபித்த முடிவுடன் அவருக்கு "Medal of the Knesset" (அவையின் நாயகர் விருது) என்ற உயரிய விருதை வழங்கியது. இந்த விருதைப் பெறும் முதல் உலகத் தலைவர் மோடி என்பது இந்தியாவிற்குப் பெருமை சேர்க்கிறது. அந்த அவையில் யூதர்கள் மட்டுமல்லாது, அரபு இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்கள் எனப் பல்வேறு மதங்களைச் சார்ந்த பிரதிநிதிகளும் ஒருமித்த கருத்துடன் மோடியைக் கௌரவித்தது உலகிற்கே ஒரு செய்தியைச் சொன்னது.
