அஸ்ஸாம் : அஸ்ஸாமில் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பிஜேபி அரசு ஆட்சி செய்து வருகிறது. ஹிமந்தா பதவியேற்ற நாள் முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். வழிபாட்டுத்தலங்களை சுற்றிய ஐந்து கிலோமீட்டர் தொலைவிற்கு இறைச்சி விற்பனைக்கு தடைவிதித்து தனது அதிரடியை தொடங்கினார்.
மேலும் பழங்குடியின மக்களின் இடத்தை ஆக்கிரமித்து வன்முறையில் ஈடுபட்ட ஊடுருவல்காரர்களை அடக்கி மக்களிடம் நன்மதிப்பை பெற்றார். இந்நிலையில் அடுத்த அதிரடியாக நேற்று பொதுசிவில் சட்டம் பற்றி செய்தியாளர்களிடம் அடிக்கோடிட்டுள்ளார். அவர் கூறியதாவது " எல்லோருக்கும் பொதுசிவில் சட்டம் வேண்டும். எந்த ஒரு இஸ்லாமிய பெண்ணும் தனது கணவர் மூன்று மனைவிகளை வீட்டுக்கு அழைத்துவருவதை விரும்பவில்லை.
எந்த ஒரு இஸ்லாமிய பெண்ணையும் கேளுங்கள். பொதுசிவில் சட்டம் என் பிரச்சினையில்லை.இது அனைத்து இஸ்லாமிய பெண்களுக்கான பிரச்சினை. அவர்களுக்கு நீதிகிடைக்கவேண்டுமென்றால் பொதுசிவில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். அஸ்ஸாமில் உள்ள பழங்குடியினருக்கும் இஸ்லாமியர்களுக்கும் வேறுபாடு உள்ளது. இருவரும் ஒன்று கலக்க விரும்பவில்லை.
அஸ்ஸாமில் உள்ள இஸ்லாமிய சமூகம் ஒரு மதக்கோட்பாட்டை கொண்டுள்ளது. ஆனால் கலாச்சாரத்தில் வேறுபாடு உள்ளது. இந்த மாநிலம் இரு வெவ்வேறு பிரிவுகளை கொண்டது. ஒன்று அஸ்ஸாமை பூர்வீகமாக கொண்டது. அவர்கள் கடந்த 200 ஆண்டுகாலமாக புலம்பெயர்ந்த வரலாறு இல்லை. ஆனால் பழங்குடியினர் இஸ்லாமியருடன் கலக்க கூடாது என விரும்புகிறார்கள். அவர்கள் தனி அடையாளத்தையே விரும்புகிறார்கள். மாநிலத்தில் உள்ள பழங்குடியினர் மற்றும் புலம்பெயர்ந்த இஸ்லாமியர்கள் அடையாளம் குறித்து மாநில அரசு முடிவெடுக்கும்.
பொதுசிவில் சட்டம் குடிமக்களின் தனிப்பட்ட சட்டங்களை வகுத்து செயல்படுத்துவதற்கான ஒரு முன்மொழிவாகும். அனைத்து குடிமக்களுக்கும் மதம் பாலினம் ஆகியவற்றை பிரித்துப்பார்க்காமல் அனைவரையும் சமமாக பார்க்கும். தற்போது சில சமூகங்களின் தனிப்பட்ட சட்டங்கள் மத நூல்களால் நிர்வகிக்கப்படுகின்றன. அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான குடிமைச்சட்டத்தை பாதுகாக்கவே இந்த பொதுசிவில் சட்டம்" என தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் முதல்வர் ஹிமந்தாவின் பேச்சுக்கு கடும்கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.