ஒரு படம் மக்கள் மத்தியில் பேசப்படுகிறது என்றால் அதில் ஏதோ ஒரு காட்சி சர்ச்சையாக்கப்பட்டு இருக்கும். அதுவே விளம்பர யுக்தியாக மாறிவிடும். படமும் நன்கு ஓடிவிடும்.அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் ஜெய்பீம், திரௌபதி போன்ற படங்களை சொல்லலாம். ஆனால் ஹிஸ்டாரிக்கல் படங்கள் மற்றும் ஆக்கபூர்வமான படங்கள் வெளிவரும் போது, எந்த சர்ச்சை காட்சிகளும் இல்லாமல் தனி கவனம் பெற தொடங்கி உள்ளது.
அந்த வகையில் இயக்குநர் ராஜமவுலியின் பாகுபலி, ஆர்ஆர்ஆர் திரைப்படம், வரவிருக்கும் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களை சொல்லலாம். தற்போது வெளியாகி உள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெறும் மூன்று நாட்களில் ரூபாய் 500 கோடி வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்திருக்கிறது.
ராஜமவுலி இயக்கத்தில் தெலுங்கு திரையுலகின் பிரபல கதாநாயகர்கள் ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜ் மற்றும் ஆலியா பட், அஜய் தேவ்கன் உள்ளிட்ட பலர் நடித்த RRR திரைப்படம் கடந்த 25ஆம் தேதி திரைக்கு வந்தது. குறிப்பாக தமிழ் தெலுங்கு கன்னடம் இந்தி மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உலகமெங்கும் வெளியானது.
இந்த படம் தயார் செய்ய ரூபாய் ரூ. 400 கோடி வரை செலவு செய்யப்பட்டது. ஆனால் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இத்திரைப்படம் சுமார் 11 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகி வசூலில் சாதனை செய்து, மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கின்றது.
இதற்கு முன்னதாக ராஜமவுலியின் பாகுபலி இரண்டாம் பாகத்தின் முதல் நாள் வசூல் ரூ.217 கோடியாக இருந்தது. இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் இதனைத் தாண்டி ரூ.257 கோடியாக இருக்கிறது. இதன் மூலம் தன்னுடைய சாதனையை தானே முறியடித்த இருக்கின்றார் இயக்குனர் ராஜமவுலி.
குறிப்பாக கடந்த 3 நாட்களில் மட்டும் 500 கோடி வசூல் ஆகி இருக்கின்றது. அடுத்த ஒரு வாரத்தில் ஆயிரம் கோடியை தாண்டும் அளவுக்கு திரையரங்குகளில் மக்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆந்திராவில் மட்டுமல்லாது அனைத்து மாநிலங்களிலும் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் பட தயாரிப்பாளர்கள் கதாநாயகர்கள் படக்குழுவினர் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.