கர்நாடக மாநிலம் மங்களுருவில் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி உள்ளது. குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ஷாரிக் ஆட்டோவில் ஏறும்போது கையில் பையுடன் ஏறி உள்ளான் . மேலும் சம்பவத்தில் காயமடைந்த ஆட்டோ ஓட்டுனரான புருஷோத்தம் என்பவரிடம் பம்ப்வேல் போலீஸ் ஸ்டேஷன் போக வேண்டும் என்று கூறி இருக்கிறார். போலீஸ் ஸ்டேஷன் அருகில் இறங்கும்போது தான் இந்த குக்கர் வெடிகுண்டு வெடித்துள்ளது. அதனால் ஷாரிக் போலீஸ் ஸ்டேஷனை தகர்க்கும் நோக்கில் வந்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். ஷாரிக் ஆட்டோவில் ஏறும் பொழுது அவனுடன் ஒருவன் பேசிக் கொண்டு வந்ததாகவும், ஆட்டோ ஓட்டுனர் புருஷோத்தம் தகவல் கொடுத்துள்ளார். ஷாரிக்குடன் வந்தவனும் தற்கொலை படை தீவிரவாதியாக இருக்கலாம் என கர்நாடக போலீசார் தேடி வருகின்றனர்.
ஷாரிகை ஏற்கனவே கடந்த ஆண்டு ஐஎஸ் மற்றும் லஷ்கர் பயங்கரவாத , அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதால் அவனுடன் முனீர் என்பவனும் கைது செய்யப்பட்டு 8 மாதம் மேல் சிறையில் இரூந்து கடந்த வருடம் ஜூலை 23ஆம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்று வெளியில் வந்துள்ளான். பிறகு காணாமல் போன ஷாரிக் தற்பொழுது தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
முகமது ஷாரிக் தனது பெயரை பிரேம்ராஜ் என்று பெயரை மாற்றி கூறி வீடு எடுத்து தங்கி உள்ளதாகவும், குண்டு வெடிப்பில் ஈடுபட்ட ஷாரிக்கின் ஆதார் கார்டு மற்றும் சிம் கார்டு இரண்டுமே போலி என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.
முகமது ஷாரிக் தங்கி இருந்த வாடகை வீட்டை NIA மற்றும் போலீசார் சோதனை இட்டதில் அங்கு வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் தேவையான அனைத்து சாதனங்களையும் கைப்பற்றி உள்ளனர். மேலும் ஏராளமான சிம்கார்டுகள் செல்போன்கள் பேட்டரிகள், டைமர்கள், வரைபடங்கள், போலி ஆதார் கார்டுகள் மற்றும் பான் கார்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
போலீஸ் விசாரணையில் மேலும் கடந்த செப்டம்பர் மாதம் முழுவதும் ஷாரிக் கோவை,மதுரை நாகர்கோவிலில் தங்கியிருந்து வெடி பொருளுக்கு தேவையான பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்கிய தகவலும் தெரியவந்துள்ளது.
கோவை குண்டுவெடிப்புக்கும் மங்களூர் குண்டுவெடிப்புக்கும் ஒற்றுமை இருப்பதாக இரு மாநில போலீசாரும் கருதுவதால். கோவை குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்களுக்கும் இதில் தொடர்பு உள்ளதா ? என்ற கோணத்திலும் விசாரிப்பதாக போலீஸ் வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குண்டு வெடித்த இடத்தில் கைப்பற்றப்பட்ட சிம்கார்டு சிக்னலை வைத்து , ஷாரிக் யார் யாருடன் தொடர்பு வைத்திருந்தார் மேலும் அவனது கூட்டாளிகள் யார் யார் என போலீசார் தேடி வருகின்றனர்.
ஏற்கனவே கோவை குண்டுவெடிப்பில் தமிழக போலீசார் மற்றும் NIA கூட்டாக இணைந்து நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றி பலரை கைது செய்துள்ள நிலையில், மங்களூர் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட ஷாரிக்கின் தமிழக தொடர்பு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
Gokulakrishnan S