24 special

கோபாலபுரத்தின் கமிஷன் டைரி! மருமகனின் அப்பாயின்மென்ட் முதல் மனைவியின் ட்ரிப் வரை... கிடைத்த ஆதாரம்.. மொத்தமாக சிக்கிய குடும்பம்

MKSTALIN,UDHAYANIDHISTALIN
MKSTALIN,UDHAYANIDHISTALIN

அமலாக்கத் துறை தலைமை இயக்குநர் ராகுல் நவீன் நேற்று  சென்னைக்கு வந்தடைந்துள்ளார். டெல்லியிலிருந்து 3 நாள் பயணமாக வருகை தந்த அவர், சென்னை மண்டல அலுவலகத்தில் முகாமிட்டு தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள பல முக்கிய  வழக்குகளை ஆய்வு செய்ய உள்ளார்.


தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறையில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறித்தும் ஆலோசனை செய்யப்படும் என தெரிகிறது. 

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் மெகா ஊழல் விவகாரம், தற்போது திமுக அரசுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்திற்கும் மிகப்பெரிய அரசியல் மற்றும் சட்டச் சிக்கலாக உருவெடுத்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அமலாக்கத்துறை டி.ஜி.பி-க்கு அனுப்பிய ரகசியக் கடிதங்கள் கசிந்ததிலிருந்து, ஆளுங்கட்சியின் அதிகார மட்டங்கள் ஆடிப்போயுள்ளன. 

குறிப்பாக, அரசு ஒப்பந்தங்களில் 7.5 முதல் 10 சதவீதம் வரை ‘பார்ட்டி ஃபண்ட்’ என்கிற பெயரில் பகிரங்கமாக வசூல் வேட்டை நடத்தப்பட்டதாக அமலாக்கத்துறை வைக்கும் குற்றச்சாட்டு சாதாரணமானதல்ல. இந்த முறைகேடுகளுக்கு அச்சாரமாக இருந்தவர் அமைச்சரின் தம்பி நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான கவிபிரசாத் என்பது ஆதாரங்களுடன் அம்பலமாகியுள்ளது. அவர் வெறும் ஒரு இடைத்தரகர் மட்டுமல்ல, அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும், முதல்வர் குடும்பத்திற்கும் இடையே ஒரு கறுப்புப் பணப் பாலமாகவே செயல்பட்டுள்ளார் என்பதை அமலாக்கத்துறை உறுதிபடக் கூறுகிறது.

கவிபிரசாத்தின் அலைபேசி உரையாடல்கள் மற்றும் தரவுகள் மூலம், சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர் சீருடை டெண்டர் முதல் மாவட்ட வாரியான இடமாற்றங்கள் வரை அனைத்திலும் பணம் விளையாடியிருப்பது தெரியவந்துள்ளது. இதில் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரியான வருண்குமார் தனது நண்பருக்காக டெண்டர் கேட்டதும், ஒரு எம்.பி மற்றும் மூன்று எம்.எல்.ஏ-க்கள் நேரடியாகப் பட்டியல் அனுப்பி கமிஷன் கேட்டதும் திமுகவின் நிர்வாகச் சீர்கேட்டைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

மிக முக்கியமாக, இந்த விவகாரம் இப்போது அமைச்சரைத் தாண்டி முதல்வரின் குடும்பத்தை நோக்கியே குறிவைக்கிறது. முதல்வரின் மருமகன் சபரீசனின் சந்திப்புகளைத் தீர்மானிப்பதும், முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலினின் பயணத் திட்டங்களை அறிந்து வைத்திருப்பதும் கவிபிரசாத் எந்தளவிற்கு அக்குடும்பத்தின் நிழலாகச் செயல்பட்டுள்ளார் என்பதற்குச் சான்றாகும். 

முதல்வர் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்குத் தெரியாமல் இவ்வளவு பெரிய அளவிலான 'கட்சி நிதி' வசூல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்ற கோணத்தில் அமலாக்கத்துறை தனது பிடியை இறுக்கி வருகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, லஞ்ச ஒழிப்புத்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. ஒருமுறை எஃப்.ஐ.ஆர் பதிவாகிவிட்டால், அமலாக்கத்துறை பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நேரடியாகக் களமிறங்கி, சம்பந்தப்பட்டவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிரடிச் சோதனைகளைத் தொடங்கும். 

இதற்காகவே அமலாக்கத்துறை இயக்குநர் ராகுல் நவீன் தற்போது சென்னைக்கு வந்திருப்பது, அடுத்து வரும் நாட்களில் திமுகவின் முக்கியப் புள்ளிகள் மற்றும் முதல்வர் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்படுவார்கள் என்பதையே உணர்த்துகிறது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், இந்த ஊழல் புகார்கள் திமுகவின் நற்பெயருக்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, ஆளுங்கட்சியின் தலைமைக்கு நேரடி நெருக்கடியாகவும் மாறியுள்ளது.