24 special

BJYM தேசிய செயலாளர் கைது..! டில்லியில் பரபரப்பு !

Bjym
Bjym

புதுதில்லி : பிஜேபியின் இளைஞரமைப்பான BJYM தேசிய செயலாளராக இருப்பவர் தஜிந்தர் பால் சிங் பாகா(36). இவர் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து பஞ்சாப் போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக தஜிந்தர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக செய்திகள் உலவுகின்றன. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தஜிந்தருக்குமிடையேயான பனிப்போரில் அரசியல் பழிவாங்கலால் கைது செய்யப்பட்டிருக்கலாம் என நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


தஜிந்தர் தனது இல்லத்தில் இருந்தபோது 10 முதல் 12 வாகனங்களில் வந்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். அந்த குழு தஜிந்தரை மொஹாலி சாலை வழியே அழைத்துச்சென்றபோது குருஷேத்ரா அருகே ஹரியானா போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. பின்னர் பஞ்சாப் போலீசாருடன் ஹரியானா போலீசார் அவர்களுடன் வாக்குவாதம் நடத்தியுள்ளனர்.

ஹரியானா போலீஸ் அதிகாரி ஒருவர் " தஜிந்தர் தனது வீட்டிலிருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச்செல்லப்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலை நாங்கள் சரிபார்த்து குறுக்கு விசாரணை செய்யவேண்டும்" என கூறி அனைத்து வாகனங்களையும் குருஷேத்ரா பிப்லியில் உள்ள காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றனர். 

ஹரியானா அரசின் தலையீட்டை எதிர்த்து பஞ்சாப் அரசு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்போவதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து தஜிந்தரின் தந்தை செய்தியாளர்களிடம் "காலை எட்டுமணியளவில் டெல்லி ஜனக்புரியில் உள்ள எங்கள் இல்லத்திற்குள் நுழைந்த போலீசார் தஜிந்தரை வெளியே இழுத்து சென்றுள்ளனர். சம்பவத்தை வீடியோ எடுக்க எனது மொபைலை எடுத்தபோது என்னை வேறு அறைக்குள் அழைத்துச்சென்று முகத்தில் குத்தினர்" என தெரிவித்தார்.

மேலும் தஜிந்தரின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில்  மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள டெல்லி காவல்துறை கடத்தல் வழக்கு பதிவுசெய்துள்ளது. பஞ்சாப் மொஹாலியில் வசிக்கும் ஆம் ஆத்மீ தலைவரான சன்னி அலுவாலியாவின் புகாரின் அடிப்படையில் ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிடுதல் மற்றும் பகைமையை வளர்த்தல் மற்றும் கிரிமினல் மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் தஜிந்தர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது.