Politics

குளித்தலை ஐஜேகே வேட்பாளர் அட்டகாசமான வாக்குறுதி!!!

Ijk candidate
Ijk candidate

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதியில், ஐ.ஜே.கே சார்பில் போட்டியிடும் மணிகண்டன், 50 ஆண்டுகளுக்கும் மேலாக பின்தங்கிக் கிடக்கும் குளித்தலை சட்டமன்ற தொகுதியின் வளர்ச்சிக்கு என்றென்றும் அயராது பாடுபடுவேன் எனத் தெரிவித்துள்ளார்.


குளித்தலை தொகுதிக்குட்பட்ட பஞ்சப்பட்டி ஏரி, ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது. 1,100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில், ஒன்றரை டி.எம்.சி-வரைக்கும் தண்ணீரைச் சேமித்து வைக்க முடியும். ஆங்கிலேயர் காலத்தில் மழைநீரை ஒருங்கிணைத்து, பஞ்சப்பட்டி ஏரியில் சேகரித்து, அதன் மூலம் விவசாயத்துக்கும் குடிநீருக்கும் பயன்படுத்தி வந்தனர். பருவ மாற்றம் ஏற்பட்டதால், தற்போது இப்பகுதியில் பெரும்பாலும் மழை பொழிவதில்லை. இதனால், பஞ்சபட்டி ஏரியை நம்பியிருந்த விவசாயிகள், விவசாயம் செய்ய முடியாமல் பஞ்சம் பிழைப்பதற்காக வெளி மாவட்டங்களுக்கும் வெளியூர்களுக்கும் சென்றுவிட்டனர். 

இதற்குத் தீர்வே கிடையாதா? இருக்கிறது என்கிறார் ஐ.ஜே.கே வேட்பாளர் மணிகண்டன். காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படும்போது, உபரியாகச் சென்று கடலில் கலக்கும் தண்ணீரை, ராட்சத இயந்திரங்களை வைத்து குழாய்கள் மூலமோ அல்லது வாய்க்கால் வெட்டியோ பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீர் கொண்டு சென்றால், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி, இழந்த விவசாயத்தை மீட்டெடுக்க முடியும் என அடித்துச் சொல்கிறார் மணிகண்டன். குளித்தலை தொகுயில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டால், காவிரி நீரை பஞ்சப்பட்டி ஏரிக்குக் கொண்டு வரும் திட்டத்தை எப்பாடுபட்டேனும் செய்து முடிப்பேன் என்று அவர் தொகுதி மக்களிடம் உறுதி அளித்துள்ளார்.

குளித்தலை தொகுதிக்கு உட்பட்ட நங்கவரம் பகுதியில் செயல்பட்டு வந்த விதைப் பண்ணை மையம் மூலம் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு தரமான விதை நெல் அனுப்பி வைக்கப்பட்டது. 200 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த விதைப் பண்ணை மையம், தற்போது செயலிழந்து, உற்பத்தியின்றி காணப்படுகிறது. இந்த விதை மையத்தை மீண்டும் சீர்படுத்தி, நேர்த்தியான மற்றும் தரமானப் பாரம்பரிய விதை நெல் உற்பத்தி செய்து மீண்டும் தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் எனக் கூறியிருக்கிறார் மணிகண்டன். பஞ்சப்பட்டி ஏரியில் தண்ணீரை நிரப்புதல், நெல் விதைப் பண்ணையை மீட்டெடுத்தல் ஆகியவற்றின் மூலம், இங்கிருந்து வெளியேறிய விவசாயிகளை மீண்டும் தாய் மண்ணுக்கே திரும்பச் செய்து, அவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பதுடன், கால்நடைகள் வளர்ப்புக்கும் உதவ முடியும் எனக் கூறியிருக்கிறார் மணிகண்டன். 

குளித்தலையில் வாழை விவசாயம் மிகவும் முக்கிய தொழிலாக நடைபெற்று வருகிறது. ஆனால், வாழைக்கான குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்படவில்லை. எனவே, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வாழைக் கிடங்கு அமைக்கப்படும். மதுரையில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து மதுரைக்கும் செல்வதற்கு, குறுக்கு வழிப் பாதையாக உள்ள குளித்தலை - மணப்பாறை சாலையில், குளித்தலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் செயல்பட்டு வரும் ரயில்வே கேட்டினால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பல்வேறு துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர். ரயில்வே கேட் மூடப்படுவதால், குறித்த நேரத்தில் மக்கள் தங்கள் பணிக்குச் செல்ல முடியாமலும், மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லா முடியாமலும் மிகுந்த துயரத்துக்கு ஆளிகின்றனர். வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நிற்பதால், ரயில் சென்ற பிறகு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்குத் தீர்வு காண்பதற்காக, மத்திய மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுத்து கண்டிப்பாக மேம்பாலம் அமைத்து தருவேன் என இப்பகுதி மக்களிடம் உறுதி அளித்துள்ளார் மணிகண்டன். 

குளித்தலை அரசு மருத்துவமனையில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. இரவு நேரங்களில் விபத்து ஏற்பட்டால், சிகிச்சைக்காக திருச்சிக்கு மாற்றிவிடப்படுகின்றனர். எனவே, குளித்தலை அரசு மருத்துவனையை, ஐ.ஜே.கே தலைவர் ரவி பச்சமுத்துவின் அறிவுரைப்படி எஸ்.ஆர்.எம் மருத்துவமனையைப்போல் மாற்றிக்காட்டுவேன் என மக்களிடம் உறுதி அளித்துள்ளார் மணிகண்டன்.

புராதனமிக்க ஆன்மிகத் தலமான அய்யர் மலையில், ரோப்கார் அமைக்க வேண்டுமென 50 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை உள்ளது. கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் ரோப்கார் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடத்தியதால், அடுத்து வந்த அதிமுக ஆட்சி அதை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, ஆட்சி முடியும் தருவாயில் ஓட்டுக்காகப் பணிகள் தொடங்கப்பட்டு, ஆமை வேகத்தில் நகர்ந்தது. தான் வெற்றிபெற்றால், ரோப் கார் அமைக்கும் பணி உடப்னடியாக முடிக்கப்படும் என்கிறார் மணிகண்டன். இதேபோல், தீயணைப்பு நிலையம் ஒன்றை குளித்தலை பகுதியில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உடனடியாக நிறைவேற்றப்படும் எனக் கூறியிருக்கிறார். 

குளித்தலை நகரப் பகுதியில் குறுகலான இடத்தில் செயல்பட்டு வரும் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து, வசதி மிக்கப் பேருந்து நிலையமாக மாற்ற பொதுமக்களுக்கு அர்ப்பணிப்பேன் எனவும் ஐ.ஜே.கே வேட்பாளர் மணிகண்டன் உறுதியளித்துள்ளார்.