24 special

அடுத்தடுத்து கைது செய்யப்பட்ட நபர்கள்...!செந்தில் பாலாஜிக்கு மேலும் சிக்கல்


நான்காவது நாட்களாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான பல இடங்களில் வருமானவரித்துறை ரெய்டுகள் தொடர்கின்ற நிலையில்,  ஐடி அதிகாரிகளை தாக்கிய திமுக ஆதரவாளர்கள் சிலரை போலீசார் கைது செய்தது செந்தில் பாலாஜி தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அதாவது தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீது எழுப்பப்பட்ட புகார்களால் வருமான வரித்துறை அதிகாரிகள் அவருக்கு சொந்தமான 200க்கும் மேற்பட்ட இடங்களில் தங்களது சோதனைகளை மேற்கொண்டனர். ஒரு தரப்பினர் மீது தொடர்ந்து பல ஊழல் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுகள் எழுந்தால் வழக்கம்போல் நடத்தப்படும் சோதனை தான் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் நடத்தப்படும்  சோதனை என்று வருமானவரித்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது. ஆனால் அதிகாரிகளின் பணிகளை செய்ய விடாமல் திமுகவின் ஆதரவாளர்கள் அத்துமீறி அவர்களை தாக்கிய சம்பவம் மத்திய அரசு வரை சென்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு  பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளது. 


தமிழகத்தில் சென்னை, கோவை, கரூர் போன்ற மாவட்டங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது அதில் குறிப்பாக கரூர் மாவட்டம் ராமகிருஷ்ண புரத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் சோதனைகள் மேற்கொள்ள சென்ற போது அங்கு கூடியிருந்த திமுகவின் ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களிடம் அத்துமீறி உள்ளனர். உங்களோட ஐடி கார்டு காட்டுங்க, பேக்ல என்ன கொண்டு போய் வச்சு பொய் புகார் சொல்ல போறீங்க? என்று கேட்டுக் கொண்டிருந்த அந்த கும்பல் அதிகாரிகள் வந்த வாகனங்களையும் தாக்கி தங்களது பணிகளை செய்ய வந்த அதிகாரிகளையும் தாக்கியுள்ளனர். இதனால் சில அதிகாரிகள் காயமடைந்து  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதனால் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென்று காவல்துறையிடம் புகார் ஒன்று வருமானவரித்துறை அதிகாரிகள் அளித்த கையோடு சென்னை உயர்நீதிமன்றத்திலும் இந்த சம்பவத்திற்கு எதிராக வழக்கு ஒன்றையும் பதிய மனு அளித்துள்ளனர். 

மேலும் அந்த மனுவில் அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்பதை விளக்கும் வகையில் ஆடியோ ஒன்று உள்ளது என்பதையும் குறிப்பிட்டுள்ளனர். பாதுகாப்பிற்காக காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு மத்திய அரசு சிஐஎஸ்எஃப் அதிகாரிகளை பாதுகாப்பிற்காக அனுப்பியது. இந்த சம்பவத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அருண் என்பவர் அதிகாரிகளை தங்களது பணிகளை செய்ய விடாமல் தடுத்து நிறுத்தியதற்காக மற்றும் திமுக கரூர் மாநகராட்சி வடக்கு இளைஞர் அணி துணை அமைப்பாளரும் மாநகராட்சி மேயரின்உறவினருமான பூபேஷ் காரை சேதப்படுத்தியதாக கைது செய்துள்ளனர் காவல்துறையினர். இவர்களைத் தொடர்ந்து ஷாஜகான், சிவப்பிரகாசம், சின்னசாமி, ஆறுமுகம், தமிழ்ச்செல்வன், ரஜினி சிவா ஆகிய எட்டு நபர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். 

இந்த எட்டு நபர்களின் வரிசையில் மேலும் மூன்று நபர்களை காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த மூவரில் கரூர் மாநகராட்சி திமுக  கவுன்சிலர் லாரன்ஸ் அடங்குவார். திமுக கவுன்சிலர் லாரன்ஸிடம் மேற்கொண்ட விசாரணையின் படி செந்தில் பாலாஜி இடம் இவர் விசுவாசியாக இருந்து வந்ததும், செந்தில் பாலாஜி இவருக்கு அடிக்கடி பணம் கொடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதனால் முதற்கட்டமாக இவரை தட்டி தூக்கியது காவல்துறை, மேலும் இதற்கு அடுத்ததான கைது நடவடிக்கைகள் வரிசையாக நடக்கலாம் எனவும் காவல்துறை வட்டாரங்களில் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் இந்த திமுக கவுன்சிலர் காவல்துறையிடம் கூறும் விஷயத்தை வைத்து செந்தில்பாலாஜி மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் அதிகமாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.ஏற்கனவே ஒருபுறம் ரெய்டு நடவடிக்கைகள் தொடர்வதும், மறுபுறம் வருமானவரித்துறை அதிகாரிகளை தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கொக்கி போட்டு தூக்கும் பணியில் காவல்துறை தற்போது இறங்கி உள்ளது. ஒருவேளை காவல் துறை இதனை செய்யாமல் தவறும் பட்சத்தில் சி ஐ எஸ் எஃப் வீரர்கள் இதில் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என்று தெரிகிறது. இது செந்தில் பாலாஜிக்கு மேலும் தலைவலியாகவே அமையும் என்று கருத்து தெரிவிக்கப்படுகின்றன.