
கரூர் பிரசார கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், டெல்லியில் உள்ள மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ அலுவலகத்தில் நேற்று ஆஜராகி, சுமார் ஏழு மணி நேரம் நீடித்த தீவிர விசாரணையை எதிர்கொண்டார். காலை 11 மணி அளவில் அலுவலகத்திற்குள் நுழைந்த விஜய், 11.30 மணியிலிருந்து மாலை 3.45 மணி வரை தொடர்ந்து விசாரிக்கப்பட்டதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விசாரணையின் போது கேட்கப்பட்ட தொடர் கேள்விகள், விஜயை சில தருணங்களில் திணற வைத்ததாகவும், பதில்களை மிகவும் கவனமாக தேர்வு செய்து வழங்கியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சிபிஐ அலுவலகத்தின் தனி அறையில் அமர வைக்கப்பட்ட விஜயிடம், நான்கு அதிகாரிகள் மாறி மாறி கேள்விகளை எழுப்பினர். கரூர் பிரசார கூட்டத்திற்கு ஏன் தாமதமாக வந்தீர்கள், தாமதம் ஏற்படப்போகிறது என்பது தெரிந்திருந்தும் கூட்ட மேலாண்மையில் ஏன் மாற்றம் செய்யப்படவில்லை, கூட்டத்தில் மக்கள் மயங்கி விழுந்தும் நீங்கள் பேச்சை நிறுத்தாததற்கான காரணம் என்ன, குடிநீர், உணவு, மருத்துவ வசதிகள் போதிய அளவில் செய்யப்பட்டதா, கூட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் யார் பொறுப்பு என்பதுபோன்ற கேள்விகள், விசாரணையின் மையமாக இருந்ததாக கூறப்படுகிறது.
குறிப்பாக, ‘பத்து ரூபாய் பாட்டில்’ பாடலை பாடிய பிறகு ஏற்பட்ட இந்த நிலை குறித்து சிபிஐ அதிகாரிகள் எழுப்பிய கேள்விகள், விசாரணையில் முக்கிய இடம் பெற்றுள்ளன. கூட்டத்தில் குடிநீர் கிடைக்காதது குறித்த குற்றச்சாட்டுகள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பொறுப்பா அல்லது கட்சித் தலைவரான விஜயின் பொறுப்பா என்ற கோணத்தில் அதிகாரிகள் தீவிரமாக கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு பதிலளித்த விஜய், நிகழ்ச்சி ஏற்பாடுகள் முழுவதும் ஆதவ் அர்ஜுன், புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட நிகழ்ச்சி குழுவினரின் கட்டுப்பாட்டில்தான் இருந்ததாகவும், அடிப்படை வசதிகள், கூட்ட மேலாண்மை ஆகியவை அவர்களது பொறுப்பு எனவும் விளக்கம் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விசாரணையின் போதே, பாதுகாப்பு வழங்க வேண்டிய கடமை மாநில அரசுக்கே உண்டு என்றும், திட்டமிட்டு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் விஜய் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை சிபிஐ அதிகாரிகள் விரிவாக பதிவு செய்து கொண்டதாகவும், அதனை தொடர்ந்து காவல்துறை அனுமதி, பாதுகாப்பு திட்டம், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கூடுதல் கேள்விகள் எழுப்பப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் நான்கு மணி நேர தொடர் விசாரணைக்கு பிறகு, மதிய உணவுக்கான இடைவெளி வழங்கப்பட்ட நிலையில், விசாரணை முடிந்தபின்பும் விஜய் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தனி அறையில் அமர வைக்கப்பட்டார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் மற்றும் அவர் அளித்த பதில்கள் அனைத்தும் கணினியில் பிரிண்ட் எடுக்கப்பட்டு, அதனை வாசிக்க வைத்து, கையெழுத்தும் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. மாலை 6 மணிக்கு பிறகே விஜய் சிபிஐ அலுவலகத்தை விட்டு வெளியே வந்தார்.
இந்நிலையில், விசாரணை இதோடு முடிவடையவில்லை என்றும், இன்னும் சில முக்கிய கேள்விகள் மீதமுள்ளதாகவும், அடுத்த கட்ட விசாரணை தொடரும் என்றும் சிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அடுத்த விசாரணையை தள்ளிவைக்க விஜய் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், அதனை சிபிஐ ஏற்றுக்கொண்டு, பொங்கலுக்கு பிறகு மீண்டும் ஆஜராக அனுமதி அளித்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விசாரணையின் போது, இந்த விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியையும் விசாரணைக்கு அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விஜய் முன்வைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான விசாரணை அரசியல் தளத்தில் மேலும் தீவிரமடையக்கூடும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
