24 special

மத்திய அரசு மெத்தனம் காட்ட கூடாது..தமிழகத்தில் முதல் நபராக வாய் திறந்த கிருஷ்ணசாமி !

krishnasamy
krishnasamy

இந்திய பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு போன்ற விவகாரங்களில் எப்போதும் உறுதியாக கருத்து தெரிவித்து வருபவர் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி, இந்த முறை காஷ்மீர் விவகாரம் குறித்து தமிழகத்தில் முதல் நபராக கருத்து தெரிவித்து இருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு


தற்காப்புக்காக இந்து பண்டிட்கள் - புத்திஸ்டுகளுக்கு ஆயுத பயிற்சியும், அதிநவீன ஆயுதங்களும் வழங்க வேண்டும், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து சட்டம் இயற்றி ஏறக்குறைய மூன்று வருடங்கள் ஆகின்றன. எனினும் அங்கு அமைதி திரும்பாதது வருத்தமளிக்கிறது. சிறப்பு அந்தஸ்து பெற்றிருந்ததை கொண்டு தனிநாடு கோரிக்கையை முன்வைத்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சக்திகள் தொடர் வன்முறையில் ஈடுபட்டதால் காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்கள் பெரும் போர்களமாகவே இருந்தது.

சிறப்பு அந்தஸ்து பெற்ற காஷ்மீர் மாநிலத்தின் ஆட்சி பொறுப்பிற்கு வந்தவர்கள் இஸ்லாமியர் அல்லாத பூர்வீகக் குடிமக்களான இந்து பண்டிட்கள், புத்த மதத்தினர், ஜைனர்கள், பழங்குடியினர் உள்ளிட்டோர் மீது நடந்தேறிய வன்முறைகளைத் தடுத்து நிறுத்தவில்லை. பட்டப்பகலில் படு கொலைகள், கற்ப்பழிப்புகள், கொள்ளை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வந்தன.பொதுமக்கள் என்ற போர்வையில் ராணுவத்தின் மீதும் கல்லெறி சம்பவங்களும் நடந்து வந்தன. 

சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்ட மாநிலம் என்பதால் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மக்களின் வரிப்பணமும் மத்திய அரசின் மூலம் காஷ்மீர் அரசுக்கு வளர்ச்சி என்ற அடிப்படையில் கோடி கோடியாக கொட்டி செலவழிக்கப்பட்டது. எனினும் அங்கு சாதாரண பொது மக்கள் மீதான கொலைவெறித் தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்படவில்லை. இந்திய அரசியல் சாசனத்தின் 21ஆவது  பிரிவின் படி, இஸ்லாமியர் அல்லாத அனைத்து பிற சமுதாய மக்களின் உயிருக்கும், உடமைகளுக்கும் பாதுகாப்பின்மை நிலவியதால் 370 சரத்தையே ரத்துச் செய்துவிட்டு சட்டம் - ஒழுங்கு மற்றும் நிர்வாக செயல்பாடுகள்  அனைத்தும் மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்பட்டு இன்று காஷ்மீர், ஜம்மு, லடாக் ஆகிய மூன்று யூனியன் பிரதேசங்களாக செயல்பட்டு வருகின்றன. 

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் 90-களில் தங்கள் மீது நடந்தேறிய வன்முறைகளில் இருந்து உயிர் தப்பிக்க காஷ்மீரிலிருந்து வெளியேறியவர்கள் மீண்டும் அந்த மண்ணிற்க்கே திரும்பினர். ஆனால் கடந்த சில மாதங்களாக காஷ்மீரில் நடக்கும் வன்முறை  சம்பவங்கள் மிகவும் கவலை அளிக்கக்கூடியதாக இருக்கிறது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 8 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் வங்கி அதிகாரி, இன்னொருவர் ஆசிரியர், மற்ற ஆறுபேரும் வயிற்றுப் பிழைப்புக்காக சிறுசிறு வேலை தேடி வந்தவர்கள்.

இவ் வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ள இந்துக்கள் இப்பொழுது காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து மீண்டும் வெளியேறி பிற பகுதிகளில் தஞ்சம் புகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். நாளுக்குநாள் காஷ்மீரில் அதிகரித்து வரும் இதுபோன்ற  சட்ட விரோத செயல்களை தடுத்து நிறுத்துவதற்கு மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? 370 சரத்தை ரத்துசெய்து விட்டதால் மட்டுமே காஷ்மீரில் அமைதி திரும்பி விடும் என்ற எண்ணத்தில் மத்திய அரசு இருந்து விடக்கூடாது.

370 சரத்தை ரத்து செய்வதில் இருந்த வேகமும் ஆர்வமும் விருப்பமும் காஷ்மீரை மீண்டும் அமைதி பூங்காவாக மாற்றுவதிலும் சிறிதினும் குறைந்து போய்விடக்கூடாது. காஷ்மீரில் கடந்த 2 மாதத்தில் நடந்த பல்வேறு சம்பவங்களை பார்க்கும்போது காஷ்மீர் நிர்வாகம் இதில் மெத்தனம் காட்டுகிறது என்ற ஐயம் எழாமலில்லை. 

இந்திய அரசும், மத்திய உள்துறையின் வேகமாக செயல்பட்டு ஜம்மு, காஷ்மீர், லடாக் பகுதிகளில்  நவீன ஆயுத பயிற்சி பெற்ற வீரர்களை கொண்டு எல்லைகளில் பாதுகாப்பு அளிக்க வேண்டும். வேறு முகாமுக்கு அச்சப்பட்டு செல்லும் மக்களுக்கு நம்பிக்கை கொடுத்து அவர்களை மீண்டும் சொந்த பகுதியிலேயே குடியிருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அதுமட்டுமின்றி தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளாக கூடிய இந்து பண்டிட்கள், புத்திஸ்டுகள், ஜைனர்கள், கிறித்தவர்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு நவீன ஆயுத பயிற்சியும், பயிற்சி பெற்றவர்களுக்கு அதிநவீன ஆயுதங்களையும் வழங்குவதன் மூலம் தான் அவர்களின் பாதுகாப்பு நிரந்தரமாக உறுதி செய்யப்படும் என்பதை மத்திய அரசு உணர்ந்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் கிருஷ்ணசாமி.