
திமுகவில் தேர்தல் விருப்ப மனுக்கள் பெறத் தொடங்கியுள்ள நிலையில், அறிவாலயத்தில் கோஷ்டிப் பூசலும் வாரிசு அரசியலும் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. ஒருபுறம் இளைஞரணிக்கு 50 இடங்களை ஒதுக்க வேண்டும் எனத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அழுத்தம் கொடுக்க, மறுபுறம் மூத்த அமைச்சர்கள் தங்கள் வாரிசுகளைக் கரை சேர்க்க முதல்வரைச் சுற்றி வளைத்துள்ளனர். தங்களுக்கு ஒரு சீட், தங்கள் வாரிசுக்கு ஒரு சீட் என அமைச்சர்கள் இரட்டை லாபம் பார்க்கத் துடிப்பது கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, காட்பாடியில் மீண்டும் போட்டியிட விரும்பிய துரைமுருகன், தனது உடல்நிலையைக் காரணம் காட்டி இப்போது தனது மருமகள் சங்கீதாவிற்கு வாய்ப்பு கேட்டு தலைமையைத் அதிர வைத்துள்ளார். ஏற்கனவே மகன் கதிர் ஆனந்த் எம்பியாக இருக்கும் நிலையில், மருமகளையும் அரசியலுக்குக் கொண்டு வரும் துரைமுருகனின் கணக்கு, 'இது கட்சியா அல்லது குடும்ப அறக்கட்டளையா?' என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இதே பாணியில் அமைச்சர் காந்தி ராணிப்பேட்டையைத் தனக்கும், சோளிங்கரைத் தன் மகன் வினோத்துக்கும் கேட்டு மல்லுக்கட்டுகிறார்.
விழுப்புரம் மண்டலத்தில் பொன்முடி தனது மகன் கௌதம சிகாமணிக்கு விக்கிரவாண்டி தொகுதியைப் பெற்றுத்தரத் துடிக்க, "நாங்கள் வெறும் போஸ்டர் ஒட்ட மட்டும்தானா?" என உள்ளூர் உடன்பிறப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். திருவண்ணாமலையில் எ.வ.வேலு தனது மகன் கம்பனுக்காகவும், கடலூரில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தனது மகன் கதிரவனுக்காகவும் இப்போதே தொகுதிகளை வளைக்கத் தொடங்கிவிட்டனர். ரகுபதி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் எனப் பட்டியல் நீண்டுகொண்டே போவது, உழைத்தவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற அச்சத்தை அடிமட்டத் தொண்டர்களிடையே உருவாக்கியுள்ளது.
உட்பூசல்கள் ஒருபுறமிருக்க, கூட்டணிக் கட்சிகளின் அதீத கோரிக்கைகள் முதலமைச்சர் ஸ்டாலினுக்குத் தலைவலியை ஏற்படுத்தியுள்ளன. கடந்த முறை ஒதுக்கியதை விடக் கூடுதல் இடங்களை விசிகவும், கம்யூனிஸ்டுகளும் கோருவதோடு, காங்கிரஸ் கட்சி 41 தொகுதிகள் வேண்டும் என அடம்பிடிக்கிறது. புதிய வரவான தேமுதிகவையும் திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் திமுக இருப்பதால், அக்கட்சி போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை 150-க்கும் கீழ் குறைய வாய்ப்புள்ளது. வாரிசுகளின் நச்சரிப்பு, சீனியர்களின் பிடிவாதம், கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடி என முக்கோணப் போராட்டத்தில் திமுக தலைமை திணறி வருவது தெளிவாத் தெரிகிறது.
மாற்றுக் கட்சிகளிலிருந்து வந்தவர்களில், விழுப்புரத்தில் லட்சுமணன், விளாத்திகுளத்தில் மார்க்கண்டேயன், கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஈரோடு கிழக்கில் எம்.எல்.ஏ சந்திரக்குமார் என ஏற்கெனவே சிலர் எம்.எல்.ஏ-க்களாக இருக்கிறார்கள். இப்போது, புதிதாக வந்த சிலரும் சீட் எதிர்பார்க்கிறார்கள். ஓ.பி.எஸ் அணியிலிருந்து தி.மு.க-வுக்கு வந்த மனோஜ் பாண்டியனுக்கு ஆலங்குளம் தொகுதியைத் தருவதாக வாக்குறுதி அளித்திருந்தது தலைமை. அதை நம்பி, அவருமே ஆலங்குளம் தொகுதியில் வேலையை ஆரம்பித்து விட்டார். ‘ஒரத்தநாடு தொகுதி எப்போதும் உங்களுக்குத்தான்’ என்று சொல்லியே வைத்திலிங்கத்தையும் தி.மு.க-வுக்கு வரவழைத்தனர். அதை நம்பி, தன் மகனுக்காகத் தேர்தல் வேலையைத் தொகுதியில் தொடங்கிவிட்டார் வைத்தி. ‘வருங்கால அமைச்சரே...’ என்று போஸ்டர் மட்டும்தான் பாப்பிரெட்டிப்பட்டியில் ஒட்டவில்லை. மற்றபடி, தொகுதியில் முழுவீச்சில் களமிறங்கி வேலை பார்க்கிறார் அ.தி.மு.க-விலிருந்து வந்திருக்கும் முன்னாள் அமைச்சர் பழனியப்பன்.
பெருந்துறையில் தோப்பு வெங்கடாசலம், கோவில்பட்டியில் மாணிக்கம் ராஜா, கும்மிடிப்பூண்டியில் தே.மு.தி.க-விலிருந்து வந்த சி.ஹெச்.சேகர் எனப் பலருமே சீட்டுக்காகத் தலைமையை நெருக்குகிறார்கள். நாம் தமிழர் கட்சியிலிருந்து வந்த ராஜீவ் காந்தி, கோவையில் ஒரு தொகுதியை எதிர்பார்த்திருக்கிறார். மக்கள் நீதி மய்யத்திலிருந்து வந்த டாக்டர் மகேந்திரன் பொள்ளாச்சியிலும், தளபதி முருகேசன் கிணத்துக்கடவிலும், ரவி தொண்டாமுத்தூரிலும் சீட் கேட்டு காத்திருக்கிறார்கள். த.மா.கா-விலிருந்து வந்த டி.ஆர்.சண்முகசுந்தரம், மேட்டுப்பாளையம் தொகுதியில் சீட் கேட்கிறார்.
இப்படி, ‘நாங்களும் இருக்கோம். எங்களைக் கைவிட்டுடாதீங்க...’ என்று புதுவரவாகக் கட்சிக்குள் நுழைந்தவர்கள் பலருமே சீட்டுக்காக முட்டி மோதுகிறார்கள். இதனால், ரொம்பவே நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பது முதல்வர் ஸ்டாலின்தான். ‘மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி’ என்று அவ்வப்போது சொல்வார் முதல்வர். இப்போது, முதல்வருக்கு நாலா பக்கமும் இடியாகிவிட்டது” என்றனர்.
