பஞ்சாப் : தஜிந்தர் பாஹா கைதை தொடர்ந்து டெல்லி மற்றும் பஞ்சாப் போலீசார் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. இதற்கு முன்னரே டெல்லி இம்பீரியல் ஹோட்டலில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந் மான் இருவரும் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் ஹிந்துஸ்தான் போஸ்ட் பத்திரிக்கை நிருபர் நரேஷை பஞ்சாப் போலீசார் தங்கியிருந்தனர்.
இதுகுறித்து டெல்லி போலீசார் பஞ்சாப் காவல்துறையினர் மீது வழக்கு பதிந்திருந்தனர். மேலும் தஜிந்தர் பாஹா கைதை ஆட்கடத்தல் வழக்காகவும் டெல்லி போலீசார் பதிவுசெய்தனர். இது இரண்டு மாநில போலிசாருக்கிடையே பனிப்போரை அதிகப்படுத்தியது. இந்நிலையில் டெல்லி சிபிஐ பஞ்சாப் சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான மூன்று இடங்களில் நேற்று முதல் அதிரடி சோதனை நடத்தி வருவது பஞ்சாப் போலீசாரை கொந்தளிக்க வைத்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் அமர்கார்க் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் ஆம் ஆத்மீயை சேர்ந்த ஜஸ்வந்த் சிங் கஜ்ஜான் மஜ்ரா. இவர் இயக்குனராக இருக்கும் தாரா கார்ப்பரேஷன் லிமிடெட் (தற்போது மலாவுத் அக்ரோ லிமிடெட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) பேங்க் ஆப் இந்தியா லூதியானா கிளையில் பலகோடிகள் கடனாக பெற்று திரும்ப செலுத்தாத புகார் வங்கி தரப்பில் கொடுக்கப்பட்டது.
இந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ அந்த நிறுவனத்தில் நேற்று முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறது. மேலும் ஜஸ்வந்த் சிங் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பெயரில் பல ஷெல் நிறுவனங்கள் ஆரம்பித்து நிதி மோசடியில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் சங்கருர் பகுதியில் ஜஸ்வந்த்துக்கு சொந்தமான மூன்று இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது.
இந்த சோதனையில் ஜஸ்வந்த் மற்றும் அவரது சகோதரர் குல்வந்த் உள்ளிட்டோர் தொடர்புடைய ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டது. சுமார் 40 கோடி அளவில் மோசடியில் எம்.எல்.ஏ மற்றும் அவரது சகோதரர்கள் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. மேலும் 19 லட்சத்திற்கான போலி காசோலை மற்றும் 47 லட்சம் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆம் ஆத்மீ கட்சியின் 90 சதவிகித தலைவர்கள் பெரும் பணக்காரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த வருடம் நடத்தப்பட்ட விவசாயிகள் போராட்டத்திற்கு இவர்களில் பலர் நிதியுதவி செய்தது குறிப்பிடத்தக்கது. சிபிஐ நடத்திய சோதனை அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என ஆம் ஆத்மீ விமர்சித்து வருகிறது.