தெலுங்கானா : தெலுங்கானா மாநிலத்தில் சாலைகள் குண்டும் குழியாக சரிவர பராமரிக்கப்படாமல் இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக மக்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும் சாலை போடும் ஒப்பந்தம் ஆளும்கட்சிக்கு நெருக்கமானவர்களுக்கு கொடுக்கப்படுவதால் தரமற்ற சாலைகள் போடப்படுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் உள்ள ஹஸன்பள்ளி பகுதியில் லாரியும் மினிவேனும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் ஒன்பதுபேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 17க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மினிவேனில் இருந்தவர்கள் எல்லாரெட்டியில் நடைபெற்ற ஒரு திருவிழாவில் கலந்துகொண்டு திரும்பியபோது இந்த அசம்பாவிதம் நடைபெற்றது.
விபத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்படும் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பித்து ஓடிவிட்டார். விபத்தை கண்ட பொதுமக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இதுகுறித்து பேசிய காமரெட்டி காவல் கண்காணிப்பாளர் " இந்த கொடூர விபத்து தொடர்பாக வழக்கு பதியப்பட்டு லாரி ஓட்டுனரின் அடையாளம் காணப்பட்டுள்ளது. தப்பியோடிய அவரை விரைவில் பிடிப்போம்.
இந்த சோகமான விபத்தில் அஞ்சவ்வா (35), வீரமணி (35), லச்சவ்வா (60), சாயவ்வா (38), ஷைலு (35), எல்லய்யா (53), போசய்யா (60), கங்கவ்வா (45), வீரவ்வா (70) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். சம்பவத்தை நேரில் கண்டவர்கள் பேரதிர்ச்சிக்கு உள்ளாகினர். உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதறியழுதது மனதை உறையவைப்பதாக இருந்தது.
இதுதொடர்பாக இன்று பிரதமர் மோடி " தெலுங்கானாவில் உள்ள காமரெட்டி மாவட்டத்தில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக துயரமடைகிறோம். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் மீண்டு வர பிரார்த்தனை செய்கிறோம். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா 50000 மும் PMNRF நிதியிலிருந்து நிவாரணமாக வழங்கப்படும்" என தெரிவித்துள்ளார்.