ராமநாதபுரம் மாவட்டத்தில் 1964-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி நள்ளிரவில் கோரப்புயல் தாக்கி 10,000-திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.புயலால் பாதிக்கப்பட்ட தனுஷ்கோடியை கடல் நீர் கபளீகரம் செய்து 59 ஆண்டுகளாகியும் அந்த பேரிடர் இன்றளவும் அப்பகுதி மக்களின் மனதில் நீங்கா வடுவாய் உள்ளது. அந்தமான் கடலில் கடந்த 1964ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, புயலாக மாறி பேய் காற்று வீசி, தனுஷ்கோடி என்ற நகரையே புரட்டிப்போட்டது. உச்சபட்ச வேகத்தில் ஊருக்குள் புகுந்த கடல்நீர், வீடுகள், கோவில்கள், தேவாலயங்கள் என அனைத்து பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்கள் மற்றும் அவர்களது உடைமைகளை சுருட்டிக் கொண்டு சென்றது. இதில் பல ஆயிரக்கணக்கான உயிர்கள் காவு வாங்கியது கடல்நீர்.
புயலின் கோரத்தை அறியாமல் தனுஷ்கோடியை நெருங்கிக் கொண்டிருந்த பாம்பன் - தனுஷ்கோடி பாசஞ்சர் ரயில் புயலில் சிக்கி தூக்கி வீசப்பட்டு ரயிலில் இருந்த அனைத்து பயணிகளும் கடலுக்குள் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அதில் இன்ப சுற்றுலாவாக ரயிலில் தனுஷ்கோடிக்கு சென்ற 120 மாணவர்களும் கடல் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். வர்த்தக நகரம் என்று அழைக்கப்பட்ட தனுஷ்கோடி ஒரே நாள் இரவில் அழிந்த சம்பவம் ஒட்டு மொத்த உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.இந்த தகவலறிந்து தமிழகமே அதிர்ந்துபோன நிலையில் அந்த பேரழிவு ஏற்பட்டு 59 வருடங்கள் ஆகியும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் அப்பகுதி மக்கள் மத்தியில் இன்றளவும் நீங்கா வடுவாக மாறியுள்ளது. மண் மூடிப் போன மேடாக மாறிய தனுஷ்கோடியில், புயலின் அடையாளமாக சிதிலமடைந்த ஒரு தேவாலயம் மற்றும் சில கட்டடங்களும் மட்டுமே எஞ்சியுள்ளது. அங்கு தற்போது கடைகள் அமைக்கப்பட்டு சுற்றுலாத் தளமாக மாற்றப்பட்டு வருகிறது.
புயலால் பாதிக்கப்பட்ட தனுஷ்கோடியில் உள்ள பழைய கட்டடங்களை பார்வையிட ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதாகவும், அவர்களுக்கு தேவையான படகு போக்குவரத்து வசதியை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தி தர வேண்டும் இப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுக்குகின்றனர்.பொதுமக்களின் வசதிக்காக மத்திய அரசு சாலை வசதி ஏற்படுத்தி தந்ததாகவும், பேரிடருக்கு முன்பு இருந்தது போல், தலைமன்னார்- ராமேஸ்வரம் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்தை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும், இந்த கோரதாண்டவங்களை தமிழ்நாடு எதிர்கொண்டு இன்றோடு 59 ஆண்டுகளாகியும், இன்றும் அது ஏற்படுத்திச்சென்ற வடு அப்படியே மக்களின் மனதில் வேதனையாக இருக்கிறது!