லக்னோ : டாக்டர் ராம் மனோகர் லோஹியா தேசிய சட்டப்பல்கலைக்கழகம் மற்றும் ஒடிசா தேசிய சட்டப்பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய நீதிபதி ஹெச்.ஆர்.கன்னா இரண்டாவது நினைவுதின கருத்தரங்கில் வோக்ஸ் பாப்புலி vs ரூல் ஆப் லா இந்திய உச்சநீதிமன்றம் எனும் தலைப்பில் நடந்த கருத்தரங்கில் உச்சநீதிமன்ற நீதிபதி பார்வதிவாலா கலந்துகொண்டு பேசினார்.
அதில் சமூக வலைத்தளங்களில் தனிப்பட்டபயனர்கள் மற்றும் சமூக மற்றும் டிஜிட்டல் ஊடகங்களின் செயல்பாடுகள் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார். அவர் பேசியதாவது " விசாரணை என்பது நீதிமன்றங்களால் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் ஒரு செயல்முறையாகும். இருந்தபோதிலும் நவீன யுகத்தில் டிஜிட்டல் மீடியாக்களின் தலையீடுகள் நீதித்துறையில் தேவையற்ற ஒரு தலையீடு.
இது லட்சுமண ரேகையை பலமுறை கடந்துசெல்கிறது. இது மிகுந்த கவலைக்குரியது. டிஜிட்டல் மீடியாக்கள் நீதித்துறையின் செயல்பாட்டை ஆராய தொடங்கும்போது பாதி உண்மையையே முன்வைக்கின்றன. இவர்கள் பொதுமக்களுக்கு நீதிவழங்குவதில் மிகப்பெரும் சவாலாக உள்ளனர். தற்போது நீதிபதிகள் சட்ட அமைப்பு என்ன சொல்கிறது என்பதைவிட ஊடகங்கள் என்ன நினைக்கிறது என்பதில் அதிக கவனம் செலுத்தவேண்டியுள்ளது.
இது நீதிமன்றத்தின் புனிதத்தன்மையை அதன் மரியாதையை புறக்கணித்து சட்டத்தின் ஆட்சியை கேள்விக்குரியதாக்குகிறது. அயோத்தி சர்ச்சையை எடுத்துக்கொண்டால் அடிப்படையில் அது ஒரு நிலப்பிரச்சினை. அது ஒரு உரிமைசர்ச்சை. அது ஒரு தெய்வத்தின் எல்லையாக இருந்தது. ஆனால் இறுதித்தீர்ப்பு வருவதற்குள் அது அரசியல் சாயம் பூசப்பட்டது.
சமூக ஊடகங்கள் மகத்தான ஒரு சக்தி. விசாரணை நடைபெற்று முடிவதற்கு முன்னரே கற்றம்சாட்டப்பட்டவர் நிரபராதி என்ற உணர்வை தூண்டிவிடுகிறது. மத்திய அரசு டிஜிட்டல் மற்றும் சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகளை அதிகப்படுத்தி அவற்றை நெறிமுறைப்படுத்தவேண்டும்" என நீதிபதி பார்வதிவாலா குறிப்பிட்டார்.