
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது இன்று ஏட்டளவில் மட்டுமே எஞ்சியிருக்கும் ஒன்றாக மாறிவிட்டது. விடியல் தருவோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த திமுக, இன்று தமிழகத்தைப் பாதுகாப்பற்ற ஒரு இருண்ட மாநிலமாக மாற்றிக் கொண்டிருக்கிறது. நாள்தோறும் சமூக வலைதளங்களிலும், செய்தித் தாள்களிலும் வெளிவரும் விளம்பரங்களுக்காகக் கோடிக்கணக்கான ரூபாய் மக்களின் வரிப்பணத்தை வாரி இறைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், தன் மூக்கிற்கு நேர் கீழே நடக்கும் கொடூரங்களை ஏனோ கண்டுகொள்ள மறுக்கிறார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஏழு வயதுச் சிறுமிக்கு இழைக்கப்பட்ட கொடுமை, இந்த அரசின் நிர்வாகத் தோல்விக்கு மற்றுமொரு கறை படிந்த சாட்சியமாகும். மாலையில் விளையாடச் சென்ற ஒரு பிஞ்சு குழந்தை, ரத்தக் கறையோடும் தீராத வலியோடும் அழுதுகொண்டே வீடு திரும்புவதைக் கண்டு அந்தப் பெற்றோர் துடித்த துடிப்பு, இந்த ஆட்சியாளர்களின் மனசாட்சியைச் சற்றும் உலுக்கவில்லையா? தமிழகம் அமைதிப் பூங்காவாக இருப்பதாக மேடைதோறும் முழங்கும் முதலமைச்சர், உண்மையில் இங்கே நடப்பது அராஜகத்தின் ஆட்சி என்பதை உணரத் தவறிவிட்டார். காவல்துறை தன் கையில் இருந்தும், குற்றவாளிகள் அச்சமின்றி உலா வருவதும், பிஞ்சு குழந்தைகளைக் குறிவைப்பதும் தொடர்கதையாகிவிட்டது.
குமாரபாளையம் சம்பவத்தில் குற்றவாளியைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், இறுதியில் பொதுமக்கள் அந்த காமக் கொடூரனைப் பிடித்துத் தர்ம அடி கொடுத்துக் காவல்துறையிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். இதுவே இந்த அரசின் மீதும், காவல்துறையின் செயல்பாட்டின் மீதும் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின்மையைப் பிரதிபலிக்கிறது.. சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் இரண்டரை வயதுப் பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர் ஆளும் திமுகவின் இளைஞர் அணி நிர்வாகி என்பதுதான் வேதனையின் உச்சம். அதிகார பலமும், அரசியல் பின்னணியும் இருந்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற துணிச்சலைத் தன் கட்சியினருக்கே இந்த அரசு வழங்கியிருக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
தமிழகம் முழுவதும் கஞ்சா மற்றும் போதைப்பொருள் புழக்கம் காட்டுத்தீ போலப் பரவியிருக்கிறது. பள்ளி மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை போதைக்கு அடிமையாகிக் கிடப்பதும், அதன் விளைவாக இத்தகைய பாலியல் வன்கொடுமைகள் அதிகரிப்பதும் கண்கூடாகத் தெரிகிறது. ஆனால், போதைப் பொருளை ஒழிக்கப் போவதாகக் கூறிவிட்டு, வெறும் விளம்பரப் படங்களை மட்டும் எடுத்து வெளியிடுவதால் எவ்விதப் பயனும் இல்லை. விளம்பரங்களில் மட்டுமே கவனம் செலுத்தும் ஸ்டாலின், களத்தில் இறங்கிச் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தவறிவிட்டார். ஒரு முதலமைச்சராகத் தன் மாநிலத்தின் பிஞ்சு குழந்தைகள் கூடப் பாதுகாப்பாக இருக்க முடியாது என்ற சூழல் இருக்கும்போது, வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்க்கப் போவதாகக் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. உள்ளூரில் இருக்கும் குழந்தைகளுக்கே பாதுகாப்பு வழங்க முடியாத அரசு, எத்தகைய வளர்ச்சியை நோக்கித் தமிழகத்தைக் கொண்டு செல்லப் போகிறது?
மக்களின் வரிப்பணத்தை விளம்பர நிறுவனங்களுக்கு வாரி வழங்குவதை நிறுத்திவிட்டு, குற்றவாளிகளின் மனதில் அச்சத்தை உருவாக்கும் வகையில் கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தித் தப்பிக்கும் குற்றவாளிகளுக்குப் புகலிடமாகத் திமுக மாறக்கூடாது. ஒவ்வொரு முறையும் பாதிப்பு ஏற்படும்போது மட்டும் கண்துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதை விடுத்து, இனி ஒரு குழந்தை கூட இத்தகைய கொடுமைக்கு ஆளாகக் கூடாது என்ற உறுதியான நிலைப்பாட்டை அரசு எடுக்க வேண்டும். பிஞ்சு குழந்தைகளின் அலறல் சத்தத்தை விட, ஸ்டாலினின் விளம்பரங்களின் சத்தம் ஓங்கி ஒலிப்பது தமிழகத்திற்கு நேர்ந்த மிகப்பெரிய சாபக்கேடு.
